பதிவு:2024-03-08 10:12:53
கடம்பத்தூர் அகரம் கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது :
திருவள்ளூர் மார்ச் 08 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த அகரம் கிராமம், புதுமாவிலங்கை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் நளன்( 41). வழக்கறிஞரான இவர் .கடந்த 5-ஆம் தேதி தன் மோட்டார் சைக்கிளில் வீடு அருகே உள்ள புதுமாவிலங்கை கிராமத்தில் பெட்ரோல் போடுவதற்காக சென்றார்.
அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அதே கிராமத்தை சேர்ந்த பசுபதி (40) என்பவர் நளன் ஒட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளார். இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த நளன், பார்த்து வரக்கூடாதா என பசுபதியிடம் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த பசுபதி நளனை தகாத வார்த்தையால் பேசி கையால் தாக்கியுள்ளனர். இதை தொடர்ந்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நளன் கிளம்ப முயன்றார். அப்போது பசுபதி தனது நண்பர்களான அகரம் கிராமத்தை சேர்ந்த குமரன் ( 29), மற்றும் விஜி என்கின்ற விஜயன் ஆகியோருடன் சேர்ந்து மீண்டும் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து 3 பேரும் நளனை செல்ல விடாமல் தடுத்து மோட்டார் சைக்கிளை காலால் எட்டி உதைத்தனர். இதில் கீழே வந்த நளனை மீண்டும் அவர்கள் 3 பேரும் கையால் தாக்கியும் கத்தியால் வெட்டியும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதில் முகம் மற்றும் உடலில் பலத்த காயமடைந்த நளனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இச் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி வக்கீல் நளன் கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து பசுபதி, குமரன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.மேலும் தப்பி ஓடிய விஜய் என்ற விஜயனை போலீசார் தேடி வருகின்றனர்.