பத்தாம் வகுப்பு 3-ஆம் திருப்புதல் தேர்வு வினாத்தாளில் குளறுபடி : 2-ம் திருப்புதல் தேர்வில் வந்த அதே வினா வந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி :

பதிவு:2024-03-08 10:22:38



பத்தாம் வகுப்பு 3-ஆம் திருப்புதல் தேர்வு வினாத்தாளில் குளறுபடி : 2-ம் திருப்புதல் தேர்வில் வந்த அதே வினா வந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி :

பத்தாம் வகுப்பு 3-ஆம் திருப்புதல் தேர்வு வினாத்தாளில் குளறுபடி : 2-ம் திருப்புதல் தேர்வில் வந்த அதே வினா வந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி :

திருவள்ளூர் மார்ச் 08 : திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 3-ஆம் கட்ட திருப்புதல் தேர்வில், இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் அப்படியே இடம் பெற்றிருந்ததால் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து ஏப்ரல்.8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 138 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வை மாணவர்கள் 16858 பேரும் மாணவிகள் 16572 பேரும் என33430 பேர் பங்கேற்று தேர்வு எழுத இருக்கின்றனர்.

இத்தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் வகையில் டிசம்பர் மாதம் இறுதி வரையில் பாடப்பிரிவுகளை பூர்த்தி செய்யும் வகையில் திருப்புதல் தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் கடந்த ஜனவரி மாதம் முதல் திருப்புதல் தேர்வும், பிப்ரவரியில் இரண்டாவது திருப்புதல் மற்றும் மார்ச் 3-இல் நடத்த திட்டமிடப்பட்டு முதல், இரண்டு திருப்புதல் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதில்,3-ஆவது திருப்புதல் மார்ச் 4-ஆம் தேதி தொடங்கியது. இதில் 100 மதிப்பெண்களுக்கு கணக்கு தேர்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் இரண்டாம் திருப்புதல் தேர்வில் கணக்கு பிரிவில் கேட்கப்பட்ட மொத்த கேள்விகளும் மூன்றாம் திருப்புதல் தேர்வில் இடம் பெற்றிருந்தன. இதைப்பார்த்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்தாண்டுகளில் நடைபெற்ற ஒரு திருப்புதல் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள், அடுத்த தேர்வில் இடம் பெறாத வகையில் மாற்றம் இருக்கும். தற்போதைய நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் திருப்புதல் தேர்வில் ஒரே மாதிரியான தேர்வுகள் இடம் பெற்றதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தயார் செய்வதற்காக 5 பேர் கொண்ட குழு தயார் செய்யும் பணியில் ஈடுபடுவர். அந்தக் குழுவினர் ஒவ்வொரு பாடப்பிரிவுகளும் அனைத்து பாடங்களிலும் கேள்விகள் இருக்குமாறு வினாத்தாள் தயார் செய்வது வழக்கமாகும். ஆனால், திருப்புதல் தேர்விலும் இடம் பெறும் வினாத்தாள்களை கண்காணிப்பு குழுவினர் மற்றும் அலுவலர்கள் சரிபார்ப்பு பணியில் அலட்சியம் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவிகள் தயார் செய்யும் நோக்கத்திலேயே 3 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வை எழுதுவோர் பொதுத்தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும். ஆனால், ஏற்கெனவே இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில் இடம் பெற்ற வினாத்தாள், அப்படியே 3-ஆவது திருப்புதல்தேர்வில் இடம் பெற்றிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் எங்கு தவறு நடந்துள்ளதை என்பதை கண்டறிந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மறுதேரவு நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.