பதிவு:2024-03-10 16:47:45
திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா நகராட்சி ஆணையர்,நகரமன்றத் தலைவர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்களுடன் இணைத்து கேக் வெட்டி கொண்டாடினர்:
திருவள்ளூர் மார்ச் 10: திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். ஆணையர் சுபாஷினி முன்னிலை வகித்தார். இதில் நகரமன்ற பெண் வார்டு உறுப்பினர்கள் கமலி மணிகண்டன், ஆனந்தி சந்திரசேகர் வசந்தி வேலாயுதம், வி.சுமித்ரா வெங்கடேசன், பி.நீலாவதி பன்னீர்செல்வம், அம்பிகா ராஜசேகர் , சாந்தி கோபி, பத்மாவதி ஸ்ரீதர், அருணா ஜெய்கிருஷ்ணா, இந்திரா பரசுராமன், எ.எஸ்.ஹேமலதா, க.விஜயலட்சுமி, எஸ்.தனலட்சுமி மற்றும் நகராட்சி பெண் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் நகராட்சி ஆணையர் தனது சொந்த செலவில் நகரமன்றத் தலைவர், நகராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊழியர்கள் என 50-க்கும் மேற்பட்டோருக்கு ஒரே மாதிரியான டிசைன் மற்றும் கலர் புடவையை வாங்கி கொடுத்து அதனை அனைவரும் கட்டி வந்து மகளிர் தினவிழாவை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழந்தனர். இதில் பேசிய ஆணையர் சுபாஷினி, பெண்களுக்கு கல்வி தான் முக்கியம். தாங்கள் படிக்காமல் இருந்தாலும், தங்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும். கல்வி ஒன்று தான் அவர்களது வாழ்வை மேம்படுத்தும். பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர். வீட்டை விட்டே அனுப்பாமல் இருந்ததால் தான் பெரும்பாலான பெண்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது அனைத்து பெண்களும் தைரியமாக வெளியே வந்து நன்றாக படித்து நல்ல வேலைகளில் உள்ளனர். எனவே பெண் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். நன்றாக படித்ததால் தான் ஆணையர், நகர்மன்றத் தலைவர் போன்ற பதவிகளில் பெண்களாகிய தாங்கள் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நகரமன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் பேசும் போது, பெண் பிள்ளைகள் படிப்பதன் மூலம் அந்த குடும்பமே முன்னுக்கு வருகிறது. தைரியமாக வளர்க்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைத்து பெண்களையும் பேச வைத்தார். அப்போது, சிறு வயதில் திருமணம், தற்போது பாலியல் வன்கொடுமையால் ஏற்படும் பாதிப்புகள், குடும்ப சூழ்நிலையில் வேலைக்கு செல்வதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பேசியபோது நகராட்சி ஆணையர் சுபாஷினி மற்றும் நகரமன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் ஆகியோர் அவர்களை உற்சாகப்படுத்தியதோடு சிறப்பாக பேசிய துப்புரவுப் பணியாளர்களை கட்டி அரவணைத்து வாழ்த்து தெரிவித்து, உங்கள் கோரிக்கை நிறைவேற்ற உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.