பதிவு:2024-03-27 08:05:22
திருவள்ளூர் (தனி) தொகுதியில் முன்னாள் அமைச்சர்கள் புடை சூழ தேமுதிக வேட்புமனு : பாஜக சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் பேரணியாக வந்து வேட்புமனு : பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்தார் :
திருவள்ளூர் மார்ச் 26 : நடைபெற உள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து கடந்த 20-ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி முதல் 24 வரை 5 நாட்களாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் நேற்று 25-ஆம் தேதி திருவள்ளூர் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணி தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நல்லதம்பி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பாளர் நல்லதம்பியுடன் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல்ரஹீம், மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், தேமுதிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் திருவள்ளூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து பேரணியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வருகை தந்தனர்.
ஆனால் தேமுதிக மாநில துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு வருகை தந்தார். ஆனால் தேமுதிக, பாஜக பிஎஸ்பி கட்சியினர் நிர்வாகிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக குவிந்ததால் திருவள்ளூர் நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. இதனால் எல்.கே.சுதீஷ் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தர காலதாமதமானது. இதனையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான த. பிரபு சங்கரிடம் தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பி வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக மாநில துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக தலைமையிலான வெற்றிக்கூட்டணி 40 தொகுதியையும் கைப்பற்றும் என்றும், விருதுநகரில் பாஜக சார்பில் ஸ்டார் வேட்பாளராக நடிகை ராதிகா போட்டியிடுவது குறித்து கேட்டதற்கு, தேமுதிக வேட்பாளர் விஜயகாந்தின் மகனான பிரபாகரனும் ஸ்டார் வேட்பாளர் தான் என்றும் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, முன்னள் எம்பி வேணுகோபால், நிர்வாகிகள் திருவேற்காடு சீனிவாசன், சூரகாபுரம் சுதாகர், ராமஞ்சேரி மாதவன், திருவாலங்காடு சக்திவேல், நகர செயலாளர் ஜி.கந்தசாமி உள்பட அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
பெட்டிச் செய்தி :
சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் வருகை தந்தார். அப்போது மாவட்ட தலைநகர் திருவள்ளூர் ஜே.என்.சாலையில் வந்து கொண்டிருந்தபோது பாஜக, பிஎஸ்பி போன்ற கட்சிகள் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக காரில் வந்தவர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றதால் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால் காரில் வந்த எல்.கே.சுதீஷ் திருவள்ளூர் தலைமை தபால் நிலையத்திலிருந்து வர முடியாமல் தவித்தார். இதனையடுத்து பூண்டி ஒன்றிய தேமுதிக செயலாளர் பாலாஜியின் இரு சக்கர வாகனத்தில் ஜெ.என்.சாலை, ஜெயாநகர், சேலை ரோடு, சிவிஎன் சாலை வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். ஆனால் ஏற்கனவே தேமுதிக வேட்பாளருடன் 4 பேர் சென்று விட்டதால் போலீசார் எல்.கே.சுதீஷை அனுப்ப மறுத்துவிட்டனர். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா போலீசாருடன் பேச்சு வார்த்தை நடத்தி ஏற்கனவே வந்தவர்களில் ஒருவரை உள்ளே அழைத்துச் செல்லாமல் இவரை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றுகேட்டுக் கொண்டதின் பேரில் 20 நிமிடம் கழித்து உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பாஜக சார்பில் போட்டியிடும் பொன் வி. பாலகணபதி கூட்டணி கட்சியினருடன் இணைந்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான த. பிரபுசங்கரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பாளர் பொன்.வி.பாலகணபதியுடன் அமமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஏழுமலை, பாமக மாநில நிர்வாகிகள் கே.என்.சேகர், பிரகாஷ், மற்றும் பாஜக நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் லோகநாதன் ஆகியோருடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் பொன் வி.பாலகணபதி, மத்தியில் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் பெண் ராஜ்யசபா எம்பி இடம் வேட்பாளரான பொன் வி. பாலகணபதி தவறாக நடந்து கொண்டதாக வீடியோ ஒன்று வைரலானதால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா என்று கேட்டதற்கு, இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து வெளியிட்ட வீடியோ அது. அந்த வீடியோவால் தனது வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விவரமான விளக்கத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதேபோல் தொகுதி மக்களுக்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்துவது என்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை நன்கு அறிந்தவன் என்பதால் தான் வெற்றி பெற்றதும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு திருவள்ளூர் தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றுவேன் என வேட்பாளர் பொன் வி. பாலகணபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மாநில செயலாளர் ஆனந்தி பிரியா, மாவட்ட தலைவர் அஸ்வின்(எ) ராஜசிம்ம மகேந்திரா, மாநில ஓபிசி அணி செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், லயன் சீனிவாசன், மாவட்ட செயலாளர்கள் பாலாஜி, பன்னீர் செல்வம், ரமேஷ், மண்டல் தலைவர்கள் சதீஷ், பழனி, சுரேஷ் மாவட்ட மருத்துவ அணி தலைவர் லோகேஷ் பிரபு உள்பட பலர் இருந்தனர்.
அதே போல் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளர் வழக்கறிஞர் டி.தமிழ்மதி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான த.பிரபு சங்கரிடம் வேட்புமனு தாக்கல்செய்தார். அவருடன் மாநில செயலாளர் பெரியாரன்பன், மாவட்ட தலைவர் கீழானூர் பிரேம், வெள்ளானூர் வெங்கட், அலுவலக செயலாளர் அம்பேத் ஆனந்த், மாவட்ட பொது செயலாளர் புங்கத்தூர் டி.தேவா ஆகியோர் வந்திருந்தனர்.