பதிவு:2022-05-17 13:11:29
கொழுந்தலூரில் 112 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான நில அளவை குறித்த பயிற்சி வகுப்பு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் மே 17 : திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், தாமரைப்பாக்கம் பொதுப்பணித்துறை முகாம் அலுவலகத்தில் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ஹெவன் - மீள்குடியேற்றத்திட்ட செயல்பாட்டு நிறுவனத்தின் முயற்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நரிக்குறவர் குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் - திருவள்ளூர் இந்த்செட்டி மூலம் 6 நாட்களுக்கான இலவச பொம்மை தயாரித்தல் பயிற்சி வகுப்பை கொசஸ்தலையாறு வடிநிலக் கோட்டத்தின் செயற்பொறியாளரின் நீர்வளத் ஆதாரத்துறை கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
முன்னதாக, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஈக்காடு பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, நீர்நிலைகளில் தேங்கியுள்ள கழிவுகளை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றி தூய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் வட்டம், கொழுந்தலூர் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் திருவள்ளூர் கோட்டத்தைச் சார்ந்த 112 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான நில அளவை குறித்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், நில அளவை உதவி இயக்குநர் குமரவேல், ஊராட்சிகள் உதவி இயக்குநர் (பொ) சுதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.ஏ.சீனிவாசன், தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேலாளர் நிறைமதி, சென்னை எல்லைச்சாலைத் திட்டம் ஹெவன் - மீள்குடியேற்றத்திட்ட செயல்பாட்டு நிறுவனத்தின் வாழ்வாதார ஆலோசகர் அறிவுடைநம்பி, திருவள்ளூர் வட்டாட்சியர் ஏ.செந்தில் குமார், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் தனசிங், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.வெங்கடேசன்,துணை வட்டாட்சியர் சோமசுந்தரம்,பெருமாள்பட்டு கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி,கீழானூர் கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.