பதிவு:2022-05-17 13:14:32
திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு எழுத்துக்களை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கி கருவி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
திருவள்ளூர் மே 17 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார் .கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 61 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 53 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 38 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 33 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 52 மனுக்களும் என மொத்தம் 237 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.5,480 வீதம் ரூ.54,800 மதிப்பீட்டிலான இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார். தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக அரசு திட்டங்களில் கட்டப்படும் வீடுகள்,கழிவறைகள் பட்டியல் தொகை நிலுவை,காலதாமதம் போன்ற காரணங்களுக்காக புகார் தெரிவிக்க ஏதுவாக உதவி மையத்தினை தொடர்பு கொள்ள கைப்பேசி எண். 9444501111 மற்றும் வாட்ஸ்அப் எண். 84389 50148 ஆகிய எண்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் படிப்பதற்காக எழுத்துக்களை பெரிதாக்கி காட்டும் ரூ.8,610 மதிப்பீட்டிலான உருப்பெருக்கி கருவியினை ஒரு மாற்றுத்திறனாளி மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பி.ப.மதுசூதணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.