பதிவு:2024-04-01 23:10:40
திருவள்ளூர் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட எஸ்பி ஆய்வு :
திருவள்ளூர் ஏப் 01 : நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 83 ஆயிரத்து 710 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 70 ஆயிரத்து 279, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 12 ஆயிரத்து 702 மற்றும் மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் 729 ஆகும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு 3687 வாக்குச்சாவடிகளும், 1301 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இதில் 281 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் , 6 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.இந்த நிலையில் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் பதட்டமான வாக்குச்சாவடிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி திருவள்ளூர் தனி தொகுதியில் உள்ள திருப்பாச்சூர், பட்டறை பெரும்புதூர் பிரையாங்குப்பம், மப்பேடு, நரசிங்கபுரம், பாப்பரம்பாக்கம் ஆகிய வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து தேர்தலின்போது பதட்டமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது டிஎஸ்பி அழகேசன், இன்ஸ்பெக்டர்கள் வெற்றிச்செல்வன், ரவிக்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.