பதிவு:2024-04-05 17:01:42
நம்பாக்கம் கிராமத்தில் 10 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து அரசு பேருந்தை சிறை பிடித்து பெண்கள் காலி குடங்களுடன் மறியல் :
திருவள்ளூர் ஏப் 05 : திருவள்ளூர் அடுத்த பூண்டி அருகே உள்ள நம்பாக்கம் கிராமத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நீர்த்தேக்க பைப்லைன் பழுது அடைந்ததால் கடந்த 10 நாட்களாக இப்பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதுபற்றி நம்பாக்கம் கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.ஆனால் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திருவள்ளூர் - பென்னாலூர்பேட்டை சாலையில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட கிராம மக்கள் காலி குடங்களுடன் திருவள்ளூரில் இருந்து பிளேஸ்பாளையம் சென்ற அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து பென்னாலூர்பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராமத்தினர் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.