பதிவு:2024-04-08 14:01:09
நிலத்தை அளவீடு செய்யாமல் வீட்டுமனைப் பட்டா வழங்கியதால் தொகுப்பு வீடுகளை கட்ட முடியாமல் இருளர் இனமக்கள் தவிப்பு : உடனடி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை :
திருவள்ளூர் ஏப் 08 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் திருமணி குப்பம் ஊராட்சி வாசணாம்பட்டு இருளர் காலணியில் 16 குடும்பங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். இதில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
மேலும் இங்குள்ள 15 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்படவில்லை. 6 குடும்பத்திற்கு மட்டும் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடிசை கட்டி வாழ்ந்து வந்த இவர்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் என அனைத்து அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் மலைவாழ் மக்கள் சங்கத்துடன் இணைந்து போராடி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பெரும்புதூரில் நடைபெற்ற பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் திருமணி குப்பம் இருளர் காலனியை சேர்ந்த11 பேருக்கு பட்டா வழங்கியுள்ளனர். இந்நிலையில் மிக்ஜாம் புயலால் இருளர் இன மக்கள் வாழ்ந்து வந்த குடிசை வீடுகள் பாதிப்படைந்தது. இதனால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை அகற்றி புதிய தொகுப்பு வீடு கட்ட அரசு ரூ. 4 லட்சம் ஒதுக்கீடு செய்து பணி ஆணையும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சேதமடைந்த குடிசை வீடுகளை முழுவதும் அகற்றிவிட்டு தொகுப்பு வீடுகள் கட்டுமானப் பணிகளை அதிகாரிகள் உடனடியாக செய்து முடிப்பார்கள் எதிர்பார்த்து அருகில் உள்ள தனியாருக்குசொந்தமான பட்டா நிலத்தில் தற்காலிகமாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இருளர் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்யாமல் வழங்கப்பட்டுள்ளதால் நிலத்தை வருவாய்த்துறையினர் அளவீடு செய்து கொடுத்தால் மட்டுமே வீடு கட்ட முடியும் என கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நிலங்களை அளவீடு செய்யுமாறு வட்டாட்சியருக்கு மனு அளித்தும், தேர்தல் பணி கராணமாக இதுவரை அளவீடு செய்யவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இருளர் இன மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் பாம்பு தேள் போன்ற விஷ பூச்சிகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே பட்டா வழங்கிய நிலையில் முறையாக அளவீடு செய்யாமல் வாழ்ந்து வந்த வீட்டை பிரித்து புதிய வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி செலவு செய்த நிலையில் நில அளவீடு செய்த பிறகே வீடு கட்ட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து இருப்பதால் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடு கட்டுவதற்கான நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும்.இல்லையேல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக இருளர் மக்கள் தெரிவித்துள்ளனர்.