பதிவு:2024-04-08 14:03:06
தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியே பாஜக கூட்டணியில் இருந்து விலகினோம், சுயநலத்தோடு யோசித்திருந்தால் கூட்டணியில் தொடர்ந்திருப்போம் திருவள்ளூரில் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு :
திருவள்ளூர் ஏப் 08 : திருவள்ளூர் தனி தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதன்படிநேற்று திருவள்ளூர் தனி தொகுதி தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பியை ஆதரித்து வாக்கு சேகரிக்க திருவள்ளூர் வருகை தந்தார். அவரை முன்னாள் அமைச்சர்கள் பி வி ரமணா, பா.பென்ஜமின், மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், முன்னாள் எம்பிக்கள் வேணுகோபால், திருத்தணி கோ.அரி,மாவட்ட செயலாளர்கள் சிறுணியம் பலராமன் , அலெக்சாண்டர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர்,.ஜெயலலிதா, விஜயகாந்த் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் கலந்து கொண்ட புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பேசும் போது, நாடாளுமன்றத்தேர்தலில் புரட்சி பாரதம் கட்சியினர் அதிமுக கூட்டணி வெற்றி பெற பாடுபடுவார்கள். மேலும் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அசைக்க முடியாத முதல் அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவார் என்றும் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பேசும் போது தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர், எம்ஜிஆர்,.ஜெயலலிதா, விஜயகாந்த் ஆசி பெற்ற பலம் வாய்ந்த கூட்டணியில் திருவள்ளூர்தனி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பியை கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் வேட்பாளர் மிக எளிமையானவர்... அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தேமுதிக சார்பில் போட்டியிடுவதால் முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டு வாக்கு சேகரித்தார்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியே பாஜக கூட்டணியில் இருந்து விலகினோம். சுயநலத்தோடு யோசித்திருந்தால் கூட்டணியில் தொடர்ந்திருப்போம். அதிமுக கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு அடி பணியாத கட்சி. தேசிய கட்சியோடு கூட்டணி வைத்து எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழ்நாடு வளர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக அதிமுக தேசிய கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை என தெரிவித்தார்.
தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கஞ்சா ஒழிப்பில் "ஓ" போட்டது தான் மிச்சம். இந்தியாவில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது எனவும் கூறிய அதிமுக பொதுச் செயலாளர் திருவள்ளூர் மாவட்டத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டார்.
திருவள்ளுரில் பிரமாண்டமான மருத்துவ கல்லூரி மருத்துவமனை வல்லரசு நாடுகளில் கூட பார்க்க முடியாது எனவும், 11 அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி. திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு மேம்பாலங்கள், தடுப்பணைகள் கொண்டு வந்தோம். இந்த கூட்டத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட அதிமுக தேமுதிக புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.