பதிவு:2024-04-09 10:04:43
ஊத்துக்கோட்டை அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு :
திருவள்ளூர் ஏப் 09 : திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி மகன் வெற்றி (8), பிரேமின் மகன் கவின் (6). இவர் இருவரும் அப்பகுயில் உள்ள தொடக்கப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மெய்யூர் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றார்களாம். அப்போது, நீச்சல் தெரியாத நிலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக நீரில் மூழ்கினார்களாம்.
இதை கரைப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் பார்த்து, உடனே ஊருக்குள் சிறுவர்களின் தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார்.அதைத் தொடர்ந்து ஏரிக்குள் மூழ்கிய 2 சிறுவர்களையும் மீட்டு உடனே திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றறனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 பேரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.