பதிவு:2024-04-25 10:35:01
தவறவிட்ட தங்க நகைகள்.. மதிப்பு 10 லட்சம் ரூபாய்.. காவல் நிலையத்தில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி
செங்கல்பட்டு: ஏப் 25 : யாரென்றே தெரியாத நபர், செங்கல்பட்டில் தவறவிட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை போலீசில் ஒப்படைத்துவிட்டு சென்றார். இதை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த நகைகளை தொலைத்தவர்கள் அவரை வெகுவாக பாராட்டினார்கள்.. இந்நிலையில் நகையை ஒப்படைத்தவர்களை அடையாளம் கண்டு டிஎஸ்பி பாராட்டினார்.
செங்கல்பட்டை அடுத்த திருமணி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 38 வயதாகும் ஜனார்த்தனன்.. இவரது தம்பி கோபிநாத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் இனிதே நடந்து முடிந்தது. திருமணத்திற்காக போடப்பட்ட 15 பவுன் தங்க நகைகளுடன் ஜனார்த்தனன் தனது மாமியார் ஷீபாவை ரயிலில் வழியனுப்பி வைப்பதற்காக செங்கல்பட்டு ரெயில் நிலையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அவ்வாறு செல்லும்போது ஜனார்த்தனனின் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க நகை செல்லும் வழியில் தவறி விழுந்தது. பாதி தூரம் சென்ற பின்னர் தான் நகை வைத்திருந்த பை எங்கோ தவறி விழுந்துவிட்டதை ஜனார்த்தனன் கண்டுள்ளார். அதை கண்டு கதறி அழுத அவர், உடனே செங்கல்பட்டு நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் செங்கல்பட்டு தொழுநோய் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த கள ஆய்வாளர் ரமேஷ் தனது பணி நிறைவு பாராட்டு விழாவுக்கு சென்று விட்டு சக ஊழியர்களுடன் காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்துள்ளார். புதிய பஸ் நிலையம் அருகே செல்லும்போது நகையுடன் பை கிடப்பதை கண்டு அதை எடுத்து பார்த்தார்.
அதை அவர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனிடையே யாரென்றே தெரியாத நபர், செங்கல்பட்டில் தவறவிட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை போலீசில் ஒப்படைத்துவிட்டு சென்றார் என்பது ஜனார்த்தனன் குடும்பத்திற்கு தெரியவந்தது.. இதை கேட்டு நெகிழ்ந்த அவரது குடும்பத்தினர், நீங்கள் நன்றாக இருக்கனும்யா.. என்று நெகிழ்ந்து போய் பாராட்டி சந்தோஷப்பட்டனர்.