பதிவு:2024-04-26 17:01:50
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமியையொட்டி, 2-வது நாளாக நேற்றும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
சித்திரை மாத பவுர்ணமி திதி நேற்று முன்தினம் அதிகாலை, 4:16 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை, 5:47 மணிக்கு நிறைவடைந்தது. இதையொட்டி, சித்ரா பவுர்ணமி நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையை கிரிவலம் செல்ல கடந்த, 22 இரவிலேயே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை வந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை முதல், இரவு வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பவுர்ணமியின், 2-வது நாளாக நேற்றும் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்களின் கூட்டம் காலை, 9:00 மணி வரையில் அதிகமாக இருந்தது. அதேபோல, அருணாசலேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. திருவண்ணாமலையில், 14 கி.மீ., துார கிரிவலப்பாதையில் பக்தர்கள் போட்டுச்சென்ற குப்பையை அகற்றும் பணியில், 1,800 துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்திரை வசந்த உற்சவம் கடந்த, 13ல், தொடங்கி, 10 நாட்கள் நடந்தது. இதன், 10வது நாளில் ஐயங்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. நிறைவு நாளாக நேற்று முன்தினம் நள்ளிரவு அருணாசலேஸ்வரர் கோவில் தங்க கொடிமரம் அருகே மன்மத தகனம் நிகழ்ச்சி நடந்தது.