பதிவு:2024-05-01 20:11:58
அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலரை தாக்கிய மூவருக்கு வலை
அரக்கோணம்: மே 01 : ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ், 42. அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை டூ- -வீலரில் அரிகிலப்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு சென்றார். காஞ்சிபுரம் -- அரக்கோணம் நெடுஞ்சாலை கல்லாறு அருகே சென்ற போது அவரை பின் தொடர்ந்த கார் முன்னே சென்று வழிமறித்து நிறுத்தப்பட்டது. காரில் இருந்து இறங்கிய மூவர் கட்டையால் ரமேஷை தாக்கினர். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் ரமேஷ் தாக்கப்படுவதை கண்டு தடுக்க வந்தனர். அவர்கள் வருவதை கண்ட மூவரும் காரில் ஏறி தப்பினர். படுகாயமடைந்த ரமேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்