பதிவு:2024-05-01 20:23:20
உண்மையாக உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்ற இளைஞர் : கடன் தொல்லையால் தந்தை தற்கொலை செய்த நிலையில் சிறுவயதில் பெட்ரோல் பங்க்கில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறிய இளைஞரின் கதை :
திருவள்ளூர் மே 01 : உண்மையாக உழைப்பவர்கள் வாழ்க்கையில் தோல்வியே பெறுவதில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காவிட்டாலும் அந்த உழைப்பு வருங்காலத்தில் அதற்கான பலனை தரும். திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி, பார்வதியின் மகன் ஜோசப் வெங்கடாசலம் (36).இவருக்கு சௌந்தரி (31) என்ற மனைவியும், ஹேமராஜ் (7), தேஜஸ்வின் (5) என்ற மகன்களும் உள்ளனர்.
இவர் கடந்த 2004 ம் ஆண்டு 10 ம் வகுப்பு முடித்தார். இந்த தேர்வில் 407 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2 ம் இடம் பிடித்தார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியான மறுநாளே இவரது தந்தை முனுசாமி கடன் தொல்லையால் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் ஜோசப் வெங்கடாசலத்திற்கு தனது தந்தை முனுசாமி விட்டுச் சென்ற 2 வீடுகளையும் எழுதி அபகரித்து சென்றனர். இந்த நிலையில் ஆசிரியர் ஆக வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டிருந்த ஜோசப் வெங்கடாசலம் மனம் தளராது பி.ஏ.வரலாறு (கரஸ்) படித்து முடித்தார்.
பின்னர் குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 2008 ம் ஆண்டு திருவள்ளூரில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் வாகனங்களுக்கு காற்று பிடிக்கும் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் 6 ஆறு வருடங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் வேலை செய்து வந்தார். 16 வருடங்கள் திருவள்ளூரில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் தொடர்ந்து ஒரு தொழிலாளியாக இரவு பகல் பாராமல் வேலை செய்து வந்த நிலையில் தற்பொழுது தான் வேலை செய்து வந்த இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கின் மேலாளராக பதவி உயர்வு பெற்று செயல்பட்டு வருகிறார்.உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதும் இவர் தொழிலாளர் சங்கத்திற்கு இணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.