பதிவு:2024-06-21 12:19:07
திருவள்ளுர் அடுத்த மேல்நல்லாத்துர் மற்றும் மணவாளநகர்ஆகிய இருவேறு பகுதியில் தொடர் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்: கடும் போக்குவரத்து பாதிப்பு :
திருவள்ளூர் ஜூன் 21 : திருவள்ளுர் அடுத்த மேல்நல்லாத்துர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடியிருப்புகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த 6 மாதமாக சரியான முறையில் மின்சார விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் பகல் இரவு நேரங்களில் பச்சிளம் குழந்தைகள், பள்ளி கல்லூரி படிக்கும் மாணவர்கள் வெளிச்சம் இன்றி படிப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் மின்சாரம் இல்லாததால் குடிநீரும் கிடைக்கவில்லை எனவும், கொசுக்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டுவருவதாக குற்றம் சாட்டுகின்றனனர்.
மேலும் மின்சாரம் இல்லாததால் குடிதண்ணீரும் இல்லாத நிலையும் கொசுக்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும் இது குறித்து மேல்நல்லாத்துர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் தங்களுக்கு சீரான முறையில் மின்சார விநியோகம் வழங்க வேண்டும் என பலமுறை புகார் செய்தும் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மேல்நல்லாத்துர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு சீரான முறையில் மின்சார விநியோகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் -ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலேயில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் நீண்ட தொலைவிற்கு அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இனிவரும் காலங்களில் சீரான முறையில் மின்சார வினியோகம் செய்யப்படுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் மறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.
அதேபோல் திருவள்ளூர் அடுத்த மணவாளநகரை சேர்ந்த பொதுமக்கள் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தொடர் மின் வெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்தது மணவாள நகர் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முறைமாக மின்சார வினியோகம் செய்யப்படுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் மறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு முறையான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.