பதிவு:2024-06-23 13:54:33
திருவள்ளூரில் கள்ளச்சாராயம் ஒழிப்பு மற்றும் தடை செய்யப்பட்ட சட்டவிரோதமான போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்
திருவள்ளூர் ஜூன் 22 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் ஒழிப்பு மற்றும் தடை செய்யப்பட்ட சட்டவிரோதமான போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களும் தீவிரமாக செயல்பட வேண்டும். மேலும், கள்ள மதுபானம் மற்றும் போதை பொருட்கள் தொடர்பான சோதனைகளை தீவிர படுத்தி கள்ள மதுபானம் மற்றும் தடை செய்யப்பட்ட சட்டவிரோதமான போதை பொருட்கள் விற்கும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ள மதுபானம் மற்றும் சட்ட விரோதமான தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்கும் குற்றவாளிகளை பிடிக்க மதுவிலக்கு காவல்துறையினர் வருவாய்த்துறையினர் குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு தடை செய்யப்பட்ட சட்டவிரோதமான போதை பொருட்களை விற்பனை செய்வதை தடுத்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்படும் முன்னறிவிப்புகள் மூலம் வழங்கப்படும் தகவல்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு தகுந்த மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் கள்ளச்சாராயம் தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ஏதேனும் தொலைபேசி எண் அல்லது whatsapp எண் காவல்துறையினரால் பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் கொடுக்கும் கள்ள மதுபானம் மற்றும் தடை செய்யப்பட்ட சட்ட விரோதமான போதைப் பொருட்கள் தொடர்பாக புகார் அளித்தால் அந்த புகாரின் மீது காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . கள்ள மதுபானம் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான செயல் திட்டத்தினை உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரி குமார், பொன்னேரி சார் ஆட்சியர் சங்கத் பல்வந்த் வாஹே, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், உதவி ஆணையர் கலால் ரங்கராஜன், தனித் துணை ஆட்சியர் கணேசன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.