பதிவு:2024-06-24 11:46:55
திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர்திருவிழா :
திருவள்ளூர் ஜூன் 24 : திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். இங்கு இந்த ஆண்டு ஆனிப்பிரம்மோற்சவ திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதன்படி காலை 6 மணிக்கு கொடியேற்றமும், மாலை 7 மணிக்கு தங்க தோளுக்கினியான் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. 2-ம் நாளான 18-ஆம் தேதி காலை 7 மணிக்கு சூர்ய பிரபை நிகழ்ச்சியும், மாலை 7 மணிக்கு யாளி வாகனத்தி வீதி உலாவும், 3-ஆம் நாளான 19-ஆம் தேதி காலை 7 மணிக்கு கருட சேவையும், காலை 8 மணிக்கு திருமழிசை ஆழ்வார் தங்க தோளுக்கினியான் வாகனத்தில் திருவீதி புறப்பாடும், 4-ஆம் நாளான 20-ஆம் தேதி காலை 7 மணிக்கு சேஷவாகனத்தில் திருவீதி புறப்பாடும் , மாலை 7 மணிக்கு சந்திரபிரபை வாகனத்தில் திருவீதி புறப்பாடும், 5-ஆம் நாளான 21-ஆம் தேதி காலை 7 மணிக்கு பல்லக்கில் (மோகினி அவதாரம்) திருவீதி புறப்பாடும், மாலை 7 மணிக்கு அம்ச வாகனத்தில் திருவீதி புறப்பாடும், 6-ஆம் நாளான 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு சூர்ணாபிேஷகமும், விமானம் நிகழ்ச்சியும், மாலை 7 மணிக்கு யானை வாகனத்தில் திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.
விழாவின் 7-ஆம் நாளான 23-ஆம் தேதியான நேற்று காலை 9 மணிக்கு துவங்கிய தேர் திருவிழா முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின் மதியம் கோவிலை வந்தடைந்தது. இதில் பூந்தமல்லி, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், சென்னை உட்பட பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி பயபக்தியுடன் வடம் பிடித்து தேரை கோவிந்தா, கோவிந்தா என பாடல் பாடி இழுத்துச் சென்றனர்.