பதிவு:2024-06-25 18:56:12
வீட்டுமனை வழங்கக் கோரி தெருக்கூத்து கலைஞர்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பாட்டுப் பாடி, நடனமாடி கோரிக்கை மனு :
திருவள்ளூர் ஜூன் 25 : திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, பழையனூர், ரங்காபுரம், ஜாகீர்மங்கலம், அத்திப்பட்டு, பட்டரைபெரும்புதூர், களக்காட்டூர்,செருக்கனூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தெருக்கூத்து நாடக கலைஞர்கள் குடும்பத்தாருடன் வசித்து வருகின்றனர் .
இவர்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டுமனை இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு அரசின் இலவச வீட்டுமனை வழங்க கோரி பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து நேற்று திருவாலங்காடு பகுதியை சேர்ந்த தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் சார்பில் தங்களுக்கு அரசின் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு 50-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு பாட்டு பாடியும், நடனமாடியும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபுசங்கரிடம் நேரில் அளித்தனர். அந்த மனு மீது கலெக்டர் தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.