பதிவு:2024-06-25 19:04:13
திருவள்ளுர் அருகே அம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடிய 2 பேரை சிசிடிவி பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர் :
திருவள்ளூர் ஜூன் 25 : திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மன் ஆலயம்.இந்த ஆலயத்திற்கு சின்ன ஈக்காடு, ஈக்காடு, திருவள்ளூர், புன்னப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.இந்நிலையில் கடந்த 16 ந் தேதி இரவு கோயில் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த 30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்கு வந்து பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பது குறித்து புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் விரைந்து வந்த மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கோயில் கேட் ஏறி உள்ளே குதித்த மர்ம நபர் கோயிலில் வைத்திருந்த கடப்பாறையால் முதலில் அம்மன் வைத்திருக்கும் அறையின் கிரில் கேட்டை உடைக்க முயற்சித்து அது முடியாததால் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை அள்ளிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இந்த உண்டியலில் கிட்டத்தட்ட ரூ. 30 ஆயிரம் காணிக்கை பணம் இருந்தாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து தப்பி சென்ற மர்ம நபர்களை சி.சி.டி.வி யில் பதிவான முகம் உருவத்தை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில் ஏற்கனவே வழிப்பறி வழக்கில் தொடர்புடைய திருத்தணி அடுத்த செருக்கனூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (22) என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
புல்லரம்பாக்கம் தனிப்படை போலீசார் செருக்கனூர் சென்று வீட்டில் இருந்த சூர்யாவை கைது செய்தும் அவர் உடன் வந்த மற்றொருவர் விவரம் கேட்டும் அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு(23) என்பவரையும் போலீசார் கைது செய்து கொள்ளையடித்த பணத்தில் மீதி வைத்திருந்த 2000 ரூபாயை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கோவில் உண்டியலில் வெறும் 9800 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் அதில் 800 ரூபாய் மதுபானம் வாங்கி இருவரும் குடித்து விட்டதாகவும் 5000 ரூபாயை சூர்யாவும் சந்துரு 4000 ரூபாயையும் எடுத்து செலவு செய்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.அதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இதுவரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.