பதிவு:2024-06-27 12:05:30
திருவள்ளூரில் நகர்மன்ற குழு சாதாரண கூட்டம் : பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் மழைநீர் கால்வாய் அடைப்புகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுவதாக நகர மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு :
திருவள்ளூர் ஜூன் 26 : திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாக கூட்டரங்கத்தில் நகர்மன்ற குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசர், நகர்மன்ற துணைத்தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், வி.சுமித்ரா வெங்கடேசன், பி.நீலாவதி பன்னீர்செல்வம், அம்பிகா ராஜசேகர் ,கே.பிரபாகரன், ஆர்.பிரபு, சாந்தி கோபி, அயூப் அலி, டி.கே.பாபு, வி.இ.ஜான், ஜி.ஆர்.ராஜ்குமார் (எ)தாமஸ், பத்மாவதி ஸ்ரீதர், அருணா ஜெய்கிருஷ்ணா, இந்திரா பரசுராமன், வி.சீனிவாசன், எ.எஸ்.ஹேமலதா, ஆர்.விஜயகுமார், ஜி கந்தசாமி, வி.எம்.கமலி, ஆனந்தி சந்திரசேகர், எல்.செந்தில்குமார், க.விஜயலட்சுமி, எஸ்.தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட மூன்று வெவ்வேறு இடங்களில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகள் எரியாத காரணத்தால் அவற்றில் பொருத்தப்பட்டிருந்த சோடியம் ஆவி விளக்குகளை அகற்றிவிட்டு எல்இடி விளக்குகள் அமைத்திடவும் அதற்காக திருவள்ளூர் ஆயில் மில் பேருந்து நிலையம், சிவன் கோவில் அருகில், மற்றும் திரு. வி.க. பேருந்து நிலையத்தில் 6 லட்சத்து 87 ஆயிரத்து 926 ரூபாய் மதிப்பீட்டிலும், பஜார் தெரு , பத்தியால் பேட்டை, காமராஜர் சிலை மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அருகில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 143 ரூபாய் மதிப்பீட்டிலும், உழவர் சந்தை, வீரராகவர் பெருமாள் கோயில் மற்றும் மீரா திரையரங்கம் அருகில் 6 லட்சத்து 68 ஆயிரத்து 395 ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையத்தில் அமைந்துள்ள மின் மோட்டார்கள் பாழடைந்து விட்டதால், பழுது நீக்கம் செய்திடவும் தொட்டியினை தூர்வாரி சுத்தம் செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஐசி எம்ஆர் பகுதியில் அமைந்துள்ள பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையத்தில் பழுது பார்த்து பராமரிப்பு பணிக்காக 2 லட்சமும் காக்களூர் பகுதியில் அமைந்துள்ள பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையத்தில் பழுது பார்த்து பராமரிப்பு பணி செய்ய 2 லட்சமும் வி.எம்.நகர் பகுதியில் அமைந்துள்ள பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையத்தில் பழுது பார்த்து பராமரிப்பு பணி செய்ய ரெண்டு 2.25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் மழை நீர் கால்வாய்களை சீரமைக்காததால் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடக்கூடிய நிலை இருப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நகர்மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன் , தாமஸ் என்கிற ராஜ்குமார், செந்தில்குமார், அருணா ஜெய் கிருஷ்ணா ஆகியோர் நகர மன்ற தலைவரிடம் முறையிட்டனர்.
மேலும் திருவள்ளூர் நகராட்சியில் இருந்து வெளியேறும் மழை நீரானது காக்களூர் ஏரியில் கலக்கக்கூடிய நிலையில் அதற்கான கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்றும் வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து மழைநீர் கால்வாய்களை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் உறுதி அளித்தார்.