பதிவு:2024-06-27 12:22:54
திருவள்ளூர் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் ரூ.11.07 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் ஜூன் 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 172 கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் 21 விவசாயிகளிடம் ரூ.11,07475 இலட்சம் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
திருவள்ளுர் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ்; பசுந்தாள் உர உற்பத்தியினை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் முக்கிய இனமான பசுந்தாள் உர உபயோகத்தினை விவசாயிகளிடையே ஊக்குவித்து மண்வளம் காக்கும் வகையில் ஆயக்கட்டு. இறவைப் பாசனப் பகுதிகளில் திருவள்ளுர் மாவட்டத்தில் 12000 ஏக்கரில் ரூ.1.20 கோடி மானியத்தில் பசுந்தாள் உர பயிர் பயிரிட திட்டமிட்டு விவசாயிகளுக்கு தற்பொது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பசுந்தாள் உர விதைகள் ஒருகிலோ முழு விலையாக ரூ.99.50 இதில் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2024-25 ஆண்டில் 104 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு தரிசுநில தொகுப்புகள் கண்டறியும் பணி நடைப்பெற்று வருகின்றது எனவும் அரசு நிலங்கள், நீர்நிலைகள், வரத்து கால்வாய்களில் பயிர் ஆக்கிரமிப்பு அறியப்பட்டு துறைகள் மூலம் நடவடிக்கை எடுத்துள்ள பட்சத்தில் அதனை புறக்கணித்து மீண்டும் தனி நபர் ஆக்கிரமிப்பு அமையும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனிநபர் மீது வழக்கு பதிவு செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
பின்னர் 5 விவசாயிகளுக்கு தலா ரூ.1990 வீதம் ரூ.9950 மதிப்பீட்டில் பசுந்தாள் உரம், 2 விவசாயிகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.1000 மதிப்பீட்டில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டமும், 2 விவசாயிகளுக்கு மன்வள அட்டையும், 1 விவசாயிக்கு ரூ.4000 மதிப்பிலான ஆத்மா திட்டம் மாடித் தோட்டம் தொகுப்பும், 1 விவசாயிக்கு ரூ.50000 மதிப்பிலான கோழிகளும், 1 விவசாயிக்கு ரூ.148000 மதிப்பிலான பவர் டில்லரும், 9 விவசாயிகளுக்கு தலா ரூ.100000 வீதம் ரூ.900000 மதிப்பீட்டில் கறவை மாட்டு கடனுதவியும் ஆக மொத்தம் 21 விவசாயிகளுக்கு ரூ.11.07 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், உதவி ஆட்சியர்(பயிற்சி) ஆயுஷ் குப்தா,வேளாண்மை இணை இயக்குநர் கா.முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) க.வேதவல்லி, வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) தயாளன், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.