பதிவு:2024-07-02 10:54:29
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணி மூலக்கரை பகுதியில் சாலையை துண்டித்து அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் :
திருவள்ளூர் ஜூலை 02 : சென்னை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தவிர்ப்பதற்காக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சந்திப்பு வரை 200 அடி சாலை 133 கிமீ நீளத்தில் பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள் கோயில் வழியாக மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை 200 அடி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், பொதுமக்கள் வாழும் மூலக்கரையில் இருந்து வெங்கல் வரை எறையூர், சித்தம்பாக்கம், மேலானுர், மொண்ணவேடு, இராஜபாளையம், மெய்யூர், விளாப்பாக்கம், அரும்பாக்கம், மாலந்தூர், தேவேந்தவாக்கம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்தப் சாலைப் பணியில் 50 ஆண்டுக்கு மேலாக காலம் காலமாக பயன்படுத்தி வந்த சாலையை துண்டித்து பணி நடைபெற்று வருவதை கண்டித்து 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ்சாலை மூலக்கரை அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்த திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் வெங்கல் இன்ஸ்பெக்டர் பாரதி, மற்றும் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளும் தனியார் தொழிற்சாலை அதிகாரிகள் மற்றும் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும்மேலாக பரபரப்பாக காணப்படுகிறது.