பதிவு:2024-07-03 11:43:02
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஜூலை 03 : தமிழ்நாடு முதலமைச்சர் தாய்த்தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு“ எனப் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய சூலை 18 ஆம் நாளினை “தமிழ்நாடு நாளாக“ கொண்டாடப்படும் என அறிவித்தார்.அதனடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகளை நடத்தி, போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.10000, இரண்டாம்பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கபெறவுள்ளன.
அவ்வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 10.07.2024 அன்று காலை 10 மணிக்கு கட்டுரை போட்டி ஆட்சி மொழித் தமிழ் என்ற தலைப்பிலும்,பேச்சு போட்டி குமரித்தந்தை மார்சல் நேசமணி,தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி என்ற தலைப்புகளில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளன.
அப்போட்டிகளுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கல்வி மாவட்டத்திற்கு ஒரு போட்டிக்கு 30பேர் வீதம் இரண்டு கல்வி மாவட்டத்திற்கு 60 பேர் என இரண்டு போட்டிகளுக்கு (கட்டுரை -60பேர், பேச்சுப்போட்டி-60) 120 பேரைத் தெரிவு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்க வேண்டும்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தெரிவித்தார்.