பதிவு:2022-05-23 11:20:49
‘சிறகுகள் 100’ என்ற திட்டத்தின் மூலம் பயன் பெற்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு உண்டு, உறைவிட கோடைக்கால சிறப்பு முகாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு பள்ளிகளில் 8-வது, 9-வது மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் 100 பழங்குடியின மாணவ, மாணவியர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து, அவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வத்தை தூண்டும் வகையிலும், சுய சிந்தனையையும், தொலைநோக்கு பார்வையையும் வளர்க்கும் விதமாகவும், செயல்பட்டு வரும் ‘சிறகுகள் 100’ என்ற திட்டத்தின் மூலம் பயன் பெற்று வரும் மாணவ, மாணவியர்களின் வாழ்வியல் திறன்களை மேம்படுத்தவும், பல்கலை நிபுணர்களுடன் சந்திக்க ஏதுவாகவும், 20.05.2022 முதல் 29.05.2022 வரை 10 நாட்கள் நடைபெறும் உண்டு, உறைவிட கோடைக்கால சிறப்பு முகாமை பழைய திருப்பாச்சூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெமோரியல் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, மாணவ, மாணவியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் “சிறகுகள் 100” என்ற பெயரில் 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள், உயர் கல்விச் சார்ந்த நிறுவனங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு நேரில் பார்வையிடப்பட்டது. சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற பெரிய கல்வி நிறுவனங்களுக்கும் கல்விப் பயணமாக அழைத்து செல்லப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக ஒரு பெரும் முயற்சியாக 10 நாட்கள் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
அது போல் “சிறகுகள் 100” என்ற திறமைசாலி மாணவர்கள் இங்கு பங்கு பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கும் இந்த கோடைக்கால பயிற்சி முகாம் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். நான் 25 வருடங்களுக்கு முன்பு ஒரு கோடைக்கால முகாமில் பங்கு பெற்று, அதன் மூலம் கிடைத்த நம்பிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியராக உங்கள் முன் இந்த முகாமை துவக்கி வைத்துள்ளதை பெருமையாக கருதுகிறேன். இது போன்று, உங்களில் யாராவது ஒருவர் நாளை இந்திய ஆட்சி பணியில் தேர்ச்சி பெற்று ஏதாவது ஒரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றும் காலங்களில் இது போன்று எங்களது மாவட்டத்தில் அன்றொரு நாள் கோடைக்கால வகுப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டதன் அடிப்படையில் எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது என்று சொல்ல வேண்டும் என்பது தான் இந்த முகாமுடைய நோக்கமாகும் என்று கூறினார்.
முன்னதாக மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் இந்திய எழுத்தறிவு திட்டம் சார்பாக அமைக்கப்பட்ட அறிவியல் கண்காட்சியில் உள்ள அரங்குகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.ஏ.சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ந.பூபால முருகன், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆ.எல்லப்பன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எம்.நிஷாந்தி, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநர் பி.ஸ்டீபன், இந்திய எழுத்தறிவு திட்ட தேசிய மேலாளர் திரு.ரங்கராஜன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெமோரியல் பள்ளி முதல்வர் சாந்தகுமாரி, பள்ளி தாளாளர் குணா, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு மாநில தலைவர் சா.அருணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.