பதிவு:2024-07-08 14:05:49
திருமழிசையில் சுடுகாட்டில் வாலிபர் வெட்டி படுகொலை : 6 மாத ஆண் கைக்குழந்தையுடன் உறவினர்கள் சாலை மறியல்: அரசு நிவாரணம் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க கோரிக்கை: 2 பேரை கைது செய்து சிறையில் அடைப்பு :
திருவள்ளூர் ஜூலை 08 : திருமழிசை பிரயம்பத்து பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(30) இறுதி சடங்கிற்கான மலர் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் 5-ஆம் தேதி இந்த பகுதியில் ஒருவர் இறந்து போன நிலையில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கும் மேளம் அடிப்பது போன்ற பணிகளை நாகராஜ் எடுத்து செய்து வந்தார்.திருமழிசையில் உள்ள சுடுகாட்டில் இறந்தவரின் உடலை கொண்டு வந்து தகனம் செய்து விட்டு இறுதி சடங்கு பணிகளை நாகராஜ் அவரது நண்பர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சுடுகாட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நாகராஜை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் பலத்த வெட்டு காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் தடுக்க சென்ற அவரது நண்பர் முத்துகிருஷ்ணன் என்பவர் வெட்டு காயங்களுடன் தப்பிய நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சுடுகாட்டிற்குள் நாகராஜ் வெட்டி படுகொலை செய்து விட்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதையடுத்து சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்ய வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதுகுறித்து வெள்ளவேடு போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு இறந்து போன நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திருமழிசை உடையார் கோயில் பகுதியை சேர்ந்த தாஸ் மகன் கிஷோர்(22) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் ஜெகநாதன்(26) என்பவரும் இறுதி சடங்கிற்கு மலர் அலங்காரம் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்ததும் இதனால் ஜெகன்நாதன் , கிஷோர் ஆகியோருக்கும் நாகராஜுக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததும் தெரியவந்தது.இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாகராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கிஷோர் மற்றும் ஜெகன்நாதன் மீது வெள்ளவேடு போலீசாரிடம் நாகராஜ் புகார் அளித்துள்ளார்.
தொழில் போட்டியில் ஏற்பட்ட மோதல் காரணமாக நாகராஜை தீர்த்துக்கட்ட கிஷோர் மற்றும் ஜெகன்நாதன் நேரம் பார்த்து வந்த நிலையில் அங்கு இறந்து போன நபரின் இறுதி சடங்கு வேலைகளையும் நாகராஜ் எடுத்ததால் ஆத்திரம் உண்டான நிலையில் கிஷோர் மற்றும் ஜெகன்நாதன் தனது கூட்டாளியுடன் சுடுகாட்டிற்குள் புகுந்து நாகராஜை வெட்டி படுகொலை செய்ததும் தடுக்க வந்த அவரது நண்பன் முத்துகிருஷ்ணனுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.இதனையடுத்து கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த கிஷோர் மற்றும் ஜெகன்நாதன் ஆகியோரை வெள்ளவேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து பிரேத பரிசோதனேக்குப் பிறகு நாகராஜ் உடல் திருமழிசைக்கு கொண்டுவரப்பட்டது.
அப்போது நாகராஜின் மனைவி சந்தியா மற்றும் அவரது உறவினர்கள் திருவள்ளூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருமழிசைப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆறு மாத ஆண் கைக்குழந்தையுடன் இருக்கும் தனது வாழ்வாதாரத்திற்கு அரசு தரப்பில் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து நாகராஜின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.