பதிவு:2024-07-09 12:24:59
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர பொது விநியோகத் திட்ட ஆய்வுக் கூட்டம் :
திருவள்ளூர் ஜூலை 09 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர பொது விநியோகத் திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நியாய விலை கடைகளுக்கு பொருட்கள் எடுத்துச் செல்லும் லாரிகளில் உள்ள ஜிபிஎஸ் கருவிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு வரப்படும் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய்களை தரம் பார்த்து பகுப்பாய்வு மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு பகுப்பாய்வு மேற்கொள்ளும் பொழுது சரி இல்லாத பொருட்களை அந்த நிறுவனத்திற்கே அனுப்பி வைத்து அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நியாய விலை கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொது மக்களிடம் விரல் ரேகை பதிவில்லாமல் பொருட்களை விற்பனை செய்யப்படக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சண்முகவள்ளி மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் கௌசல்யா, துணை பதிவாளர் பொது விநியோகத் திட்டம் ரவி குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சசிகுமார், மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.