பதிவு:2022-05-23 11:23:45
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடைக்கால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற உள்ள கோடைக்கால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.அப்பொழுது ஆட்சியர் தெரிவித்ததாவது :
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோடைக்கால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக. பள்ளி மாணவர்களுக்கிடையில் போதைப் பழக்கங்கள், கைப்பேசி உபயோகத்திற்கு அடிமையாகுதல் போன்ற பல்வேறு தீய பழக்க வழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாகி வருவது பெரும் வருந்தத்தக்கது. இதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஆராய்கின்ற போது, உடற்பயிற்சி கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை ஈடுபட வைப்பதன் மூலம் இத்தகைய தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகும் செயல்பாடுகளிலிருந்து மாணவர்களை தடுக்கலாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் 15 நாட்கள் கோடைக்கால சிறப்பு விளையாட்டு பயிற்சி உண்டு உறைவிட பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில்,15 நாட்கள் மாணவர்களுக்கு இலவசமாக தங்குமிடம், உணவு, விளையாட்டுப் பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கப்படும்.இந்த பயிற்சி முகாமில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு மாணவர்களை தயார் செய்ய அந்தந்த விளையாட்டுகளில் பயிற்சி பெற்ற தகுதியான பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இந்த வருடம் தடகளம், கால்பந்து மற்றும் கபடி ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் சிறந்த விளங்குகின்ற வகையில் மூன்று போட்டிகளுக்கும் தனிக்கவனம் செலுத்தப்படவுள்ளது. இப்பயிற்சி முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு திருவள்ளுரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 23.05.2022 மற்றும் 24.05.2022 ஆகிய தேதிகளில் பயிற்சிக்கான தேர்வுகள் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி தேர்வில் 10 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்கள் ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.இந்த பயிற்சி முகாமிற்கு இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்று இந்திய அணிக்காக பலமுறை விளையாடிய விளையாட்டு வீரர் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முகாம் முடிவுற்ற பின் திறமையான மாணவர்களை அடுத்த ஒரு வருடத்திற்கு உடற்கல்வி பயிற்சி வழங்குவது, முக்கியமாக கால்பந்து விளையாட்டிற்கு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
இதில் நோபல் கால்பந்து அகாடமி இயக்குநர் ராமன் விஜய், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ந.பூபால முருகன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செ.அருணா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்மராவ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.