பதிவு:2024-07-09 12:51:41
திருவள்ளூர் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் ’நியூ டு பிசினஸ்” என்ற புதிய கடன் வழங்கும் திட்டம் : மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அழைப்பு :
திருவள்ளூர் ஜூலை 09 : திருவள்ளூர் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் ’நியூ டு பிசினஸ்” என்ற புதிய கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமானது புத்துணர்வு பெற்று, பல மேம்பாடுகள் செய்யப்பட்டு, வாழ்ந்து காட்டுவோம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டமானது உலக வங்கி நிதியுதவியுடன் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படுகிறது. ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடனும் இத்திட்டம் தொடங்கப்பட்டதாகும். வறுமை ஒழிப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரம், வாழ்க்கை தரம் மேம்பாடு, ஊரக நிறுவனங்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு தேவையான நிதியுதவிகளை அமைத்து தருவதே இத்திட்டத்தின் குறிகோளாகும். இத்திட்டம் தமிழகத்தில் 31 மாவட்டங்களில், 120 வட்டாரங்களில், 3994 ஊராட்சிகளில் செயல்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர், மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஆகிய வட்டாரங்களில் 198 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஊரக தொழில் முனைவோர்களுக்கு, இணை மானிய நிதி திட்டத்தில் 30 சதவீதம் மானியத்தில் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இம்மாவட்டத்தில் இதுவரை புதிய மற்றும் பழைய தொழில் முனைவோர்களை 177 நபர்களை கண்டறிந்து, தகுதியின் அடிப்படையில் தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தற்போது சிறிய மாற்றம் செய்து ‘நியூ டு பிசினஸ்” என்ற புதிய கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படும் 198 ஊராட்சிகளில் புதிய மற்றும் பழைய தொழில் செய்யும் தொழில் முனைவோர்கள் இதுவரை வங்களிலோ அல்லது பிற நிதி நிறுவனங்களில் தொழில் கடன் பெறாமல் இருக்கும் பட்சத்தில், அவர்களை கண்டறிந்து தொழில் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 21 முதல் 45 வயதிற்குள் உள்ள சுய உதவி குழு உறுப்பினர்கள் அல்லது குடும்ப அட்டையில் உள்ள யாராவது ஒருவர் சுய உதவிக்குழுவில் இருந்து, தொழில் முனைவோராக விரும்பினால், சிபில் மதிப்பீடு, பயனாளி பங்குதொகை போன்ற விதிகளுக்குட்பட்டு, கடனுதவி செய்யப்படும். இவ்விதிகளின்படி கடன் பெற விரும்புவோர், கும்மிடிப்பூண்டி - 9600748040, கடம்பத்தூர் - 9952787656, மீஞ்சூர் - 9790357117 மற்றும் சோழவரம் - 9047032130 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.