பதிவு:2024-07-10 11:55:38
கும்மிடிப்பூண்டியில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த இளைஞரின் உடலை 3- வது நாளாக வாங்க உறவினர்கள் மறுப்பு : கோரிக்கையை ஏற்க மறுத்ததால் மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி :
திருவள்ளூர் ஜூலை 10 : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி பகுதியை சேர்ந்தவர் கல்யாணி. பர்மா அகதியான இவரது வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கடந்த 4-ஆம் தேதி ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது கல்யாணியின் மகன் ராஜ்குமார் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திடீரென வீட்டிற்கு சென்று தாழிட்டு உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
3 நாட்களாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்த அகதிகள் தங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் சில அடிப்படை உரிமைகளை வாங்கி உள்ளதாகவும் அகதிகள் என்ற ஒற்றைக் காரணத்தினால் எங்களை மிரட்டி இங்கிருந்து அனுப்பிவிட வேண்டும் என துடிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் அவரது கணவர் சேகர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ராஜ்குமாரின் தாய் கல்யாணி உள்ளிட்ட அவரது குடும்பத்தார் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அப்போது, ரூ 5 லட்சம் நிதி உதவி, அரசு வேலை, வீட்டுமனையுடன் அரசு சார்பில் வீடு கட்டித் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். இலவச வீட்டு மனை வழங்கவும், வேலை வாய்ப்பு வழங்க வாய்ப்பு இருந்தால் ஆவண செய்யப்படும் என ஆட்சியர் பிரபுசங்கர் அலட்சியமாக பதில் அளித்ததால் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்றும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாங்களும் தீக்குளிப்போம் எனவும் ராஜ்குமாரின் தாய் கல்யாணி மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.