பதிவு:2024-07-10 11:58:37
செவ்வாப்பேட்டை அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக 2 ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் :
திருவள்ளூர் ஜூலை 10 : திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டையில் உள்ளது அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி. இங்கு செவ்வாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவிகளிடம் ஒரு சில ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக சீண்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கு புகார்கள் சென்றது.
இதனைத்தொடர்ந்து கடந்த 1-ஆம் தேதி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் செவ்வாப்பேட்டையில் உள்ள பள்ளியால் திடீர் ஆய்வு மேற்கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தினார். மேலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையினர் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விளக்கமாக வகுப்புகள் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கிருந்த சில மாணவிகள் கணித ஆசிரியர் ஜெகதீசன், அறிவியல் ஆசிரியர் பிரேம்குமார் ஆகிய 2 பேரும் மாணவிகளிடம் தவறாக பார்ப்பதும், கை வைத்து தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் அறிக்கை பெறப்பட்டதை தொடர்ந்து, ஆதிதிராவிடர்நலத்துறை பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் மூலம் இது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2 ஆசிரியர்களும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.