பதிவு:2024-07-11 12:15:20
சாதி மதங்களை மறந்து அனைவரிடமும் பாகுபாடின்றி நட்பாக பழக வேண்டும் திருவள்ளூர் அருகே தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பரிசளிக்கும் விழாவில் நடிகர் யோகிபாபு :
திருவள்ளூர் ஜூலை 11 : மாணவ, மாணவிகள் சாதி மதங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் அனைவரிடமும் பாகுபாடியின்றி நட்பாக பழகவேண்டும் என திருவள்ளூர் அருகே விளையாட்டு போட்டியில் பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் யோகி பாபு தெரிவித்தார்
திருவள்ளூர் அருகே பாண்டூரில் இந்திரா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் கடந்த ஒரு வாரமாக கல்லூரி அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு கல்லூரியின் டீன் இந்திரா தலைமை தாங்கினார். திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது, கூடைப்பந்து போட்டியை டாஸ் போட்டும், கிரிக்கெட் விளையாடியும் மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.அதைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது: நானும் மாநில அளவிலான கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று உள்ளேன். மேலும், தொடக்கத்தில் திரைப்படத்தில் நடிகராக மாறுவதற்காக வாய்ப்புகள் கேட்டுச் சென்ற போது பல தயாரிப்பாளர்கள் உதாசீனப்படுத்தினர். ஆனாலும், கடினமாக உழைத்து தற்போது நகைச்சுவை நடிகராக மாறியுள்ளேன்.
அதேபோல், மாணவர்கள் விரும்பும் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அதோடு, பொதுமக்களும் மாணவர்களும் சாதி மதங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமலும், அனைவரிடமும் நல்ல நட்பாக பழகவேண்டும் என அறிவுரையும் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மருத்துவ மாணவர்களுடன் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடியதோடு, மாணவிகளும் அவருடம் கைப்பேசிகளில் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.