பதிவு:2024-07-12 11:23:34
செவ்வாப்பேட்டை அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக 2 ஆசிரியர்கள் போக்சோவில் கைது : விடுதலை செய்யக்கோரி மாணவிகள் சாலை மறியல் போராட்டம் :
திருவள்ளூர் ஜூலை 12 : திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டையில் உள்ளது அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி. இங்கு செவ்வாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் பள்ளி மாணவிகளிடம் ஒரு சில ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக சீண்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கு புகார்கள் சென்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 1-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை சார்பில் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அங்கிருந்த சில மாணவிகள் 2 ஆசிரியர்கள் மாணவிகளை தவறாக பார்ப்பதும், கை வைத்து தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பள்ளிக்கல்வி துறை 2 ஆசிரியர்களையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.இந்நிலையில் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு ஆசிரியர்களையும் போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இரண்டு ஆசிரியர்களை போக்சோவில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் ஆவடி சாலையில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் முன்னாள் மாணவிகள் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பாக காணப்பட்டது. இரண்டு ஆசிரியர்களும் மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர்கள் என்றும், வேண்டுமென்றே அவர் மீது பொய்யான புகார் கொடுத்து போக்சாவில் கைது செய்து இருப்பதால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் திருவள்ளூர் ஆவடி சாலையில் செவ்வாப்பேட்டை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனை அடுத்து திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் போன்ற அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் மாணவிகள் அதற்கு உடன்படாமல் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து இரண்டு ஆசிரியர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மாணவிகள் தெரிவித்தனர்.
இதனால் அங்கு மேலும் பரபரப்பாக காணப்பட்டதுஇதனை அடுத்து கூடுதல் ஆணையர் ராஜேந்திரன், இணை ஆணையர் ஐமன் ஜமால், உதவி ஆணையர்கள் தனச்செல்வன், அன்பழகன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்தை அதிகளவு பாதிக்கப்பட்டதாகவும், தங்களின் கோரிக்கைகளை புகாராக பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் உத்தரவாதம் அளித்தனர். இதனை அடுத்து மாணவிகள் காவல்துறையினரின் உத்தரவாதத்தை ஏற்று சாலை மறியலை கைவிட்டு மீண்டும் பள்ளிக்கு சென்றனர். அனைத்து மாணவிகள் சார்பில் காவல்துறைக்கும் கலெக்டருக்கும் புகார் மனு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாணவிகள் தெரிவித்தனர்.