திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு : ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி கோரிக்கை

பதிவு:2022-05-23 11:32:57



திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு : ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி கோரிக்கை

திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு : ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி கோரிக்கை

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகணேஷ். 40 வயது நிரம்பிய இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் வயிறு கோளாறு காரணமாக திருவள்ளூரில் உள்ள கற்பகம் மருத்துவமனையில் டேவிட் என்ற மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்றுள்ளார். அப்போது மருத்துவர் டேவிட் அளித்த மாத்திரையை உட்கொண்ட அவருக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு, கொப்புளங்களாக மாறி ரத்தமும், சீழும் கொட்டியதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்ததால் அவரது குடும்பத்தார் பூந்தமல்லியில் உள்ள சவீதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே வயிறு கோளாறுக்காக தவறான சிகிச்சை அளித்ததால் இது போன்று பாதிப்பு ஏற்பட்டதாக கூறி மேல் சிகிச்சையை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த ஜெயகணேஷ், பல லட்சம் செலவு செய்த நிலையில் தற்போது உடல் ஆரோக்கியம் இல்லாமலும், குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனையடுத்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.ஜெயகணேஷுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் உதயபானு, ஐசக் மற்றும் நாகரத்தினம் ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.

எம்பிபிஎஸ் முடித்த இவர் வேறு சில மருத்துவம் சார்ந்த படிப்புகளும் படித்ததாக மருத்துவமனை பலகையில் தெரிவித்து பொது மக்களை ஏமாற்றி சிகிச்சை அளித்து வந்ததாகவும், மருத்துவர் டேவிட்டின் தவறான சிகிச்சையால் தனது உடல் முழுவதும் பாதிக்கப்பட்டு உடலில் உள்ள இரத்தம் முழுவதும் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதாகவும், இது போன்று போலியான மருத்துவரை கைது செய்து, மருத்துவமனையை மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறான சிகிச்சையால் உடல் முழுவதும் பாதிக்கப்பட்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியாத அளவுக்கு உடல் மோசமடைந்ததால் இழப்பீடாக 50 லட்சம் கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார். எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற போலியான மருத்துவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.