பதிவு:2024-07-15 14:07:19
குத்தம்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.427 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனைய பணிகள் : இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் ஜூலை 13 : திருவள்ளூர் மாவட்டம், குத்தம் பாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.427 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தின் பணிகளை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழும அமைச்சரும், தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தி தெரிவித்ததாவது :
குத்தம் பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த ஆண்டுகளில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு ஏற்கனவே நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பிட வசதிகள், குளியல் அறைகள், பாலூட்டும் அறைகள், உணவகங்கள் பொதுமக்களுக்கு தேவைப்படுகின்ற மருத்துவமனைகள், அதே போல் புறநகர் காவல் நிலையங்கள், தடையில்லா மின்சாரம், சீரான குடிநீர், கழிவுநீர் செல்வதற்கான அனைத்து வழித்தடங்களையும், மழைக்காலங்களில் பஸ்நிலையங்களில் தண்ணீரில் மூழ்காமல் இருக்கின்ற ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்குவதற்கு பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக இன்று ஆய்வினை மேற்கொண்டு,சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.427 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகின்ற குத்தம்பாக்கம்பேருந்து நிலையம் திட்டமதிப்பீட்டிலேயே உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த பேருந்து நிலையம் அமையப் பெறுகின்ற நேரத்தில் சேலம், தர்மபுரி, ஓசூர் மற்றும் பெங்களூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்கின்ற பயணிகள், அதேபோல் திருப்பதிக்கு செல்கின்ற பயணிகள் பெருவாரியாக இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்ற நல்ல சூழ்நிலையை ஏற்படும்.
சென்னையினுடைய போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு தீர்வாக அமையும் என்பதால் இந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இந்த பேருந்து நிலையத்தை பொறுத்த அளவில் 41 கடைகள் அமைய இருக்கின்றன. பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஆமினி பேருந்துகளுக்கு உண்டான டிக்கெட் கவுண்டர் போன்றவற்றைக்காக 8 கடைகள் அமைய இருக்கின்றன.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உண்டான தனியான கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்கு உண்டான சாய்வு தளங்கள், மாற்றுத்திறனாளிகள் ஓய்வு எடுப்பதற்கான ஓய்வு அறைகள், திருநங்கைகளுக்கு உண்டான தனியான கழிப்பறைகள், அதேபோல் உணவகங்கள், பாலூட்டும் அரை என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பேருந்து நிலையத்தை பொறுத்த அளவில் முழுமையான மக்களுடைய பயன்பாட்டிற்கு வரும் பொழுது பேருந்து பயணத்தை மேற்கொள்பவர்கள் நிறுத்தி செல்வதற்கு உண்டான வாகனங்களான 2 சக்கர வாகனங்கள் சுமார் 1,811 வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்கள் 234 வாகனங்களும் நிறுத்தப்படுகின்ற அளவிற்கு பார்க்கிங் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. இந்த பேருந்து முனையமானது குளிரூட்டப்பட்ட ஒரு பேருந்து முனையமாக அமைய இருக்கின்றது. இந்த பேருந்து முனையம் 80% பணிகள் முடிவடைந்த நிலையில், வருகின்ற மார்ச் மாதம் 2025க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, பூவிருந்த வல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் தேசிங்கு ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் (குத்தம் பாக்கம் பேருந்து முனையம்) ஜெ.பார்த்தீபன், (திருவள்ளூர்) ஆ.இராஜ்குமார், கண்காணிப்பு பொறியாளர் பா.ராஜ மகேஷ்குமார், செயற்பொறியாளர் பா.விஜய குமாரி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.