கீழச்சேரி அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 2,23,536 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் :

பதிவு:2024-07-15 14:16:14



கீழச்சேரி அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 2,23,536 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் :

கீழச்சேரி அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 2,23,536 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் :

திருவள்ளூர் ஜூலை 15 : தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்திட ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,14,095 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றனர். தற்போது முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தில், 30,992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 18 இலட்சத்து 50 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

அதன்படி, பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும், தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு இந்தத் திட்டத்தினை விரிவுபடுத்தி, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான 15-7-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் 4.7.2024 அன்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான நேற்று ஊரகப் பகுதிகளில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 2,23,536 மாணவ, மாணவியர்கள் தினசரி பயன்பெறும் வகையில் ஊரகப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவ, மாணவிகளுக்கு உணவுப் பரிமாறி தொடங்கி வைத்தார்.

மேலும், அம்மாணவ, மாணவியர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் உணவருந்திய போது, உணவு சுவையாக இருக்கிறதா என்றும், நேரம் தவறாமல், சரியான நேரத்தில் காலை உணவை தினசரி உண்ண வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். முன்னதாக அப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவின் தரத்தினை முதலமைச்சர் சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார்.

சிறுபான்மை அமைப்பினரால் நடத்தப்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்தியமைக்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு கிறிஸ்துவ அமைப்பைச் சேர்ந்த அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் மற்றும் வாணியம்பாடி முஸ்லீம் கல்வி கழக துணைச் செயலாளர் முகமது நஹீம் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.முன்னதாக, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, கீழச்சேரி, புனித அன்னாள் தொடக்கப் பள்ளி வளாகத்தில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

விழுப்புரம் கோட்டம் - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு 2023-24 ஆண்டிற்கு 247 புறநகர பேருந்துகள் மற்றும் 64 நகரப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக இதுவரை 134 புறநகர பேருந்துகள் மற்றும் 12 நகர பேருந்துகள் புதிதாக கூண்டு கட்டி தடத்தில் இயக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது இப்பகுதி மக்கள் பயனடையும் வகையில் 3.81 கோடி ரூபாய் செலவில் 8 புறநகர பேருந்துகள் மற்றும் 2 புதிய மகளிர் விடியல் பயணப் நகர பேருந்துகள், என மொத்தம் 10 புதிய பேருந்துகளை தமிழ்நாடு முதலமைச்சர் மப்பேடு கூட்ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன், இனிகோ இருதயராஜ், எஸ். சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் எஸ். திவ்யதர்ஷினி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் க. இளம்பகவத்,புனித அன்னாள் சபையின் தலைமை அன்னை சகோதரி கிளாரா வசந்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.