காலநிலை மாற்றத்தை சமாளித்தல் குறித்த ஐநா சபை கருத்தரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பங்கேற்பு :

பதிவு:2024-07-19 12:20:40



காலநிலை மாற்றத்தை சமாளித்தல் குறித்த ஐநா சபை கருத்தரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பங்கேற்பு :

காலநிலை மாற்றத்தை சமாளித்தல் குறித்த ஐநா சபை கருத்தரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பங்கேற்பு :

திருவள்ளூர் ஜூலை 18 : அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஜூலை 8 முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்ட மாநாட்டில் ஒரு பகுதியாக காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சவால்கள், பாதிப்புகள் குறித்தும் இளைஞர்கள் தங்களையும், குடும்பங்களையும் மற்றும் சமுதாயத்தையும் பாதுகாப்பதற்கு எத்தகைய செயல்பாடுகளை செயல்படுத்துகிறார்கள் என்பது குறித்தும் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் சில்ட்ரன் பிலீவ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பிளேஸ்பாளையம் கிராமத்தை சார்ந்த சாதனா (17) என்பவர் கலந்து கொண்டார்.

ஜூலை 10 - ம் தேதி சைல்டு ஃபண்ட் அலையன்ஸ் நிறுவனத்தின் (சைல்ட் ஃபண்ட் அலையன்ஸ் என்பது 70 நாடுகளில் குழந்தைகளை மையமாகக் கொண்டு செயல்படுகிற 11 வளர்ச்சி நிறுவனங்களை உள்ளடக்கிய நிறுவனம் ஆகும்) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் ச. சாதனா காலநிலை மாற்றம் எவ்வாறு குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நல்வாழ்வினையும் பாதுகாப்பினையும் பாதிக்கின்றது,

இதன் விளைவுகளை எதிர்கொள்வதற்கும், சமாளிப்பதற்கும் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் என்னென்ன யுக்திகளை செயல்படுத்தலாம், காலநிலை மாற்றத்தினை சமாளிப்பதற்கு இளைஞர்கள் என்ன முயற்சிகளை / செயல்பாடுகளை செய்து கொண்டு இருக்கின்றார்கள், வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பல்வேறு பங்குதாரர்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைக் குறித்தும் கருத்தரங்கில் எடுத்துக் கூறினார்

அப்பொழுது அவர் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பள்ளி பாடத்திட்டங்களில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் இதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், தடுக்க வேண்டும் என்பது குறித்தும் சேர்க்கப்பட வேண்டும் என்றும், மேல்நிலைப் பள்ளிகளில் கிரீன் லேப் உருவாக்கப்பட்டு சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு, சூரிய மின்சாரம், திடக்கழிவு மேலாண்மை குறித்த அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

காலநிலை மாற்றம் குறித்து மேல்நிலைப் பாடத்திட்டத்தில் கல்லூரி பட்டப்படிப்பில் தனி குரூப் உருவாக வேண்டும் என்றும், தரிசு நிலங்களில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து அதிக அளவில் மரங்களை நடப்பட வேண்டும். மரம் வளர்த்தல், காடுகள் உருவாக்குதல் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். நீர்நிலைகளை மாசுபடாமல் பராமரிக்க வேண்டும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துதலை குறைக்க வேண்டும். வீட்டு தோட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஆலோசனைகளையும் பரிந்துரைத்தார். இக்கருத்தரங்கில் சில்ட்ரன் பிலீவ் இந்தியாவை சேர்ந்த திட்ட மேலாளர் லாவண்யா கேசவராஜ் கலந்து கொண்டார்.