பதிவு:2024-07-19 12:34:09
பூந்தமல்லி அருகே வேனில் கடத்தி வரப்பட்ட இரண்டு டன் குட்கா பறிமுதல் : போலீசாரின் கவனத்தை திசை திருப்ப வண்டியில் நாயை கட்டி வைத்திருந்தது அம்பலம் :
திருவள்ளூர் ஜூலை 19 : பூந்தமல்லி அடுத்த நாசரத்பேட்டை பகுதியில் தனியார் லாரிகள் நிறுத்தி வைக்கும் பார்க்கிங் பகுதி அருகே சந்தேகத்திற்கு இடமாக லோடுவேன் நின்று கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வேனை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டை, மூட்டையாக இருப்பது தெரியவந்தது
இதையடுத்து வாகனத்தில் இருந்த வட மாநிலத்தை சேர்ந்த ராஜலிங்கம் என்பவரை கைது செய்த போது அந்த நபர் அளித்த தகவலின் பேரில் அதே பகுதியில் மற்ற இரண்டு வாகனங்களில் குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜலிங்கம், லிங்கதுரை, தமிழ் ,ஆகிய மூன்று பேரை மடக்கி பிடித்த போலீசார் மூன்று வாகனங்களில் இருந்து சுமார் இரண்டு டன் குட்காவை பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில் பிடிபட்டவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக வாட்ஸ் அப்பில் மட்டுமே பேசி பெங்களூரில் இருந்து லோடு வேனில் குட்காவை மொத்தமாக எடுத்து வந்து வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடத்திற்கு எடுத்து வந்து குட்காவை மொத்தமாக வைத்து அவர்கள் சொல்லும் நபர்களுக்கு கை மாற்றி விட்டு அங்கிருந்து சென்றது தெரியவந்தது.
மேலும் தமிழகத்தில் சிப்பிப்பாறை நாய்களை குறைந்த விலைக்கு வாங்கி சென்று அவர்கள் வடமாநிலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக குட்கா பதுக்கி வைத்திருக்கும் வாகனத்தில் நாய்களை விற்பனைக்கு எடுத்து செல்வது போல் போலீசாரின் கவனத்தை திசை திருப்பியதும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.