பதிவு:2022-05-23 11:38:31
குத்தம்பாக்கம் ஊராட்சியில் சமத்துவபுரம் வீடுகளை ரூ.5.08 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்த்தல். புனரமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்
திருவள்ளூர் மே 23 : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், குத்தம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சமத்துவபுரம் வீடுகளை ரூ.5.08 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்த்தல், புனரமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பணிகளை துவக்கி வைத்து பேசினார்.
இந்தியாவிலேயே இதுபோன்ற சமத்துவரபுரம் திட்டம் வேறெங்கும் இல்லை. இந்த குத்தம்பாக்கம் ஊராட்சியில் சமத்துவபுரத்தை உருவாக்கி 20 ஆண்டு காலம் இருக்கும். அப்பொழுது இந்த சமத்துவபுரத் திட்டத்தை திரு.வெங்கைய்யா நாயுடு தான் திறந்து வைத்தார்.அந்த நேரத்தில் அவர் குறிப்பிட்டது இந்த சமத்துவபுரம் திட்டம் வரவேற்க வேண்டிய ஒரு திட்டம் என்றும், வளர்க்க வேண்டிய ஒரு திட்டம் என்றும் குறிப்பிட்டார். மேலும், இந்த மகத்தான திட்டத்தை இந்தியா முழுவதும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த சமத்துவபுரத்தை செப்பனிடப்பட்டு, பராமரிக்க சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் கொடுத்த மனுவினை, தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த குத்தம்பாக்கம் பகுதிக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தருவோம் என பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், நேமம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக தேசிய கிராம நகர திட்டம் மூலமாக ரூ.37 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட துணிப்பை உற்பத்தி மையத்தை பால்வளத்துறை அமைச்சர் துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் துணி பை தயாரிப்பு பணிகளை பார்வையிட்டார்.தொடர்ந்து, பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், கூடப்பாக்கம் ஊராட்சியில் மேட்டுக்கண்டிகை தாங்கல் ஏரி சீமை கருவேலம் மரங்கள் அகற்றும் பணிகளையும், ரூ. 3 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 1 மீட்டர் ஆழத்திற்கு புதிதாக குளம் வெட்டும் பணிகளையும் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இதில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வை.ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயற்பொறியாளர் வி.ராஜவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) சுதா, பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.பாலசுப்பிரமணியம், ஜி.சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.