பதிவு:2024-07-23 12:25:40
முருக்கஞ்சேரி கிராமத்தில் உடல் உபாதையை கழிக்க சென்று மாயமான 19 வயது மகன் கொப்பூர் முந்திரி காட்டில் கொன்று புதைப்பு : 17 வயது சிறுவன் உட்பட ஆறு பேர் கைது - உடல் தோண்டி எடுத்து விசாரணை :
திருவள்ளூர் ஜூலை 23 : திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் பிரவீன் குமார் (19). கூலி தொழிலாளியான இவன் மீது பைக் திருட்டு வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 10- ஆம் தேதி இரவு 9 மணி அளவில் உடல் உபாதையை கழிப்பதற்காக அருகிலுள்ள ஏரிக்கரைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து ஏரிக்கரை அருகிலும் அக்கம் பக்கத்திலும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் விசாரித்து பார்த்துள்ளனர்.
ஆனால் மகன் பிரவீன் குமார் எங்கும் வராததால் பிரவீன் குமாரின் தாய் ரேவதி மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான 19 வயது பிரவீன் குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பெயரில், மணவாளநகர் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அதே முருக்கஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் நண்பர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக 17 வயது சிறுவன் உட்பட ஆறு பேர் கொலை செய்து அரண்வாயல் அடுத்த கொப்பூர் முந்திரி காட்டில் புதைத்தது தெரிய வந்தது. இதனையடுத்து முருக்கஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் கிருஷ்ணன் (27), நாகரத்தினம் (எ)அஜய் (26), ரவி (26), சாரதி (26), தமிழ் ஒளி (27) ஆகிய ஆறு பேரை கைது செய்த போலீசார் கொலை செய்து புதைத்த இடத்தை அடையாளம் காட்ட சொல்லி உடலை தோண்டி எடுத்தனர்.
இதில் ஏடிஎஸ்பி ஹரிகுமார், திருவள்ளூர் டிஎஸ்பி அழகேசன், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ் குமார், திருவள்ளூர் தாசில்தார் வாசுதேவன், மணவாளநகர் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், துணை வட்டாட்சியர் கலைச்செல்வி, வருவாய் ஆய்வாளர் கார்த்தி, விஏஓ விஸ்வநாத் மற்றும் கைரேகை நிபுணர்கள் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் பைக் திருட்டு சம்மந்தமாக பிரவீன்குமாரை போலீசில் தகவல் சொல்லி மாட்டிவிட்டதாகவும், அப்போது, என்னை போலிசீல் மாட்டிவிட்ட உங்களை சும்மா விட மாட்டேன் என பிரவீன்குமார் எச்சரித்ததாக தெரிகிறது.
இதனால் பிரவீன்குமார் ஏதாவது செய்வதற்கு முன் தீர்த்துக்கட்ட முடிவு செய்து கடந்த ஜூன் மாதம் 10-ஆம் தேதி வீட்டிலிருந்த பிரவீன்குமார் வெளியே வந்த போது அவனை கடத்திச் சென்று கொப்பூர் முந்திரிக்காட்டில் பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு பள்ளம்தோண்டி புதைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கிருஷ்ணன், நாகரத்தினம் (எ) அஜய், ரவி, சாரதி, தமிழ் ஒளி ஆகிய 5 பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். உடலை தோண்டி எடுக்கும் வீடியோ, புகைப்படம் எதுவும் வெளியிடாமல், குற்றவாளிகளை அடையாளம் காட்ட காவல்துறை தயக்கம் காட்டுவதால், இந்த கொலை வழக்கில் வேறு ஏதேனும் பிரச்சினை இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.