பதிவு:2024-07-27 11:40:19
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருத்தணி வட்டத்தில் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் ஜூலை 26 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் நான்காவது பயணமாக திருத்தணி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று 24.07.2024 காலை 9 மணி முதல் இன்று 25.07.2024 காலை 9 மணி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது நேற்று காலை திருவலங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் அங்கன்வாடி மையம் ஊரக வளர்ச்சி பல்வேறு திட்ட பணிகள் நியாய விலை கடை அரசு உயர்நிலைப் பள்ளி நுகர்பொருள் வாணிப கழகம் பேருந்து நிலையம் காவல் நிலையம் ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இன்றைய தினம் நகராட்சிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் மக்கும் குப்பை மக்கா குப்பை பிரித்தெடுக்கும் பணி கழிவுநீர் வடிகால் பணி, முதலமைச்சரின் காலை உணவு திட்ட பொது சமையல் கூடம் , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் திருத்தணி நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சேகர் வருமா தெருவில் உள்ள 3.95 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, பசுமை உரக்குடில், முதலமைச்சரின் காலை உணவு திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு மேற்கொள்ளும் பொழுது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக நிவர்த்தி செய்ய அந்த துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன், நகராட்சி பேருந்து நிலையப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள தரைமற்ற நீர்த்தேக்க தொட்டியில் இருந்து இரண்டு மாதத்திற்குள் திருத்தணி நகராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என துறை அலுவலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இதில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க.தீபா, திருத்தணி நகராட்சி ஆணையர் அருள், திருத்தணி வட்டாட்சியர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.