பதிவு:2022-05-23 11:40:43
திருவள்ளூர் மாவட்டத்தில் 26,166 நபர்கள் குரூப் - 2 பதவிக்கான தேர்வு எழுதினர் : தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு
திருவள்ளூர் மே 23 : தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் - 2 பதவிக்கான தேர்வுகள் நடைபெறுவதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகர், கே.இ. நடேச செட்டியார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து பேசினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் - 2 பதவிக்கான தேர்வுகள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், ஆவடி, பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் திருத்தணி ஆகிய 5 பகுதிகளில் நடைபெறுகிறது. இதில் திருவள்ளூர் பகுதியில் 7,713 நபர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்ததில் 6,370 (82.59 சதவிகிதம்) நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
அதில்,1,343 (17.41 சதவிகிதம்) நபர்கள் தேர்வு எழுதவில்லை. ஆவடி பகுதியில் 7,632 நபர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்ததில் 6,187 (81.07 சதவிகிதம்) நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில், 1,445 (18.93 சதவிகிதம் ) நபர்கள் தேர்வு எழுதவில்லை. பொன்னேரி பகுதியில் 5,904 நபர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்ததில் 5,004 (84.76 சதவிகிதம்) நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில், 900 (15.24 சதவிகிதம்) நபர்கள் தேர்வு எழுதவில்லை. பூந்தமல்லி பகுதியில் 4,236 நபர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்ததில் 3,471 (81.94 சதவிகிதம்) நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில், 765 (18.06 சதவிகிதம்) நபர்கள் தேர்வு எழுதவில்லை. திருத்தணி பகுதியில் 5,825 நபர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்ததில் 5,134 (88.14 சதவிகிதம்) நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில், 691 (11.86 சதவிகிதம்) நபர்கள் தேர்வு எழுதவில்லை.
ஆக மொத்தம் திருவள்ளூர் மாவட்டத்தில் 31,310 நபர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தும், 26,166 (83.57 சதவிகிதம்) நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில், 5,144 (16.43 சதவிகிதம்) நபர்கள் தேர்வு எழுதவில்லை என மாவட்ட ஆட்சியர் கூறினார்.திருவள்ளூர் வட்டாட்சியர் ஏ.செந்தில் குமார், முதன்மை கண்காணிப்பாளரும் உதவி தலைமையாசிரியருமான கே.பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.