பதிவு:2024-07-27 12:02:28
திருவள்ளூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் ஜூலை 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் முக்கிய இனமான பசுந்தாள் உர உபயோகத்தினை விவசாயிகளிடையே ஊக்குவித்து மண்வளம் காக்கும் வகையில் ஆயக்கட்டு. இறவைப் பாசனப் பகுதிகளில் திருவள்ளுர் மாவட்டத்தில் 12000 ஏக்கரில் ரூ.1.20 கோடி மானியத்தில் பசுந்தாள் உர பயிர் பயிரிட திட்டமிட்டு விவசாயிகளுக்கு தற்பொழுது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பசுந்தாள் உர விதைகள் ஒருகிலோ முழு விலையாக ரூ.99.50 இதில் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை 2591 ஏக்கருக்கு 51.8 மெ.டன் பசுந்தாள் உர விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
குறைந்த பட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் பச்சைப்பயறு கொள்முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் குறைந்தபட்ச விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் 486 விவசாயிகளிடமிருந்து 489 மெ.டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.4,18,99,968 தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.அதேபோல் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம், திருவள்ளூர் மற்றும் திருத்தணி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில், வேளாண் விளைபொருட்களுக்கான மறைமுக ஏலம் மூலம் நல்ல விலை கிடைக்க வழிவகை செய்கிறது.
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலருக்கு சென்னை சர்க்கரை துறை ஆணையருக்கு மாவட்ட கருத்துருவை அனுப்புமாறு அறிவுறுத்தினார்.விவசாயிகளுக்கும் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கும் விவசாயம் மற்றும் இதர பணிகளுக்காக வண்டல் மண் எடுப்பது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடித்திட மாவட்ட ஆட்சியர் அறிவுரைகளை வழங்கினார்.
அரசு நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், ஏரி,குளங்கள், வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், தூர்வாருவதற்கும் மற்றும் இதர பணிகளுக்கும் வருவாய்த்;துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, பொதுப்பணித்துறை மற்றும் நில அளவீட்டு துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து கூட்டு புலத்தணிக்கை செய்து ஆய்வறிக்கையின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதனை புறக்கணித்து மீண்டும் தனி நபர் ஆக்கிரமிப்பு அமையும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனிநபர் மீது வழக்கு பதிவு செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்; தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வேளாண்மைத்துறை மூலம், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டம், அட்மா திட்டம் நேரடி நெல் விதைப்பான், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் கத்திரி குழிதட்டு மற்றும் தென்னங்கன்றுகள் ஆகியவற்றின் கீழ் 10 விவசாயிகளுக்கு ரூ.22,260-க்கு மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், வேளாண்மை இணை இயக்குநர் கா.முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண் மோகன்,க.வேதவல்லி, வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) தயாளன், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.