பதிவு:2022-05-23 12:06:23
ஓராசிரியர் பள்ளிகள் சார்பில் கர்ப்பவாய் புற்றுநோய் இலவச மருத்துவ முகாம் : 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்
திருவள்ளூர் மே 23 : திருவள்ளூர் அருகே உளுந்தை கிராமத்தில் சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில் செயல்படும் ஓராசிரியர் பள்ளிகள் வளாகத்தில் கர்ப்பவாய் புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஓராசிரியர் பள்ளிகளின் தலைவர் கே.என்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.கௌரவ செயலாளர் ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி முன்னிலை வகித்தார். இதில் தனியார் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் எஸ்.ஜி.ரமணன் கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் திருமணமாகாத மகளிருக்கு கர்ப்பவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி 3 தடவை செலுத்துவதன் மூலம் தடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் ஜனார்த்தன கனி,ஆண்ட்ரசன், பெத்தம்மாள், சௌமியா ரமணன் ஆகியோர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின் மகளிர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதேபோல், கடந்த மார்ச் மாதம் ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசி பணிக்காக தனியார் அறக்கட்டளை மூலம் ரூ.10 லட்சம் நிதி பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், நிர்வாக ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன்,ஆய்வு ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.