பதிவு:2022-05-24 15:06:03
ஆர்.கே.பேட்டையில் 250 பயனாளிகளுக்கு ரூ. 13.87 இலட்சம் மதிப்பீட்டில் மானிய விலையில் இடுபொருட்கள் : அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் வழங்கினார்
திருவள்ளூர் மே 25 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 கிராம பஞ்சாயத்துகளில் கடந்த 2021-2022-ம் ஆண்டில் 80 கிராம பஞ்சாயத்துகளும், நடப்பு ஆண்டில் 141 கிராம பஞ்சாயத்துகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களாகும். முதற்கட்டமாக 80 கிராம பஞ்சாயத்துக்களில், 386.27 ஹெக்டேர் தரிசு நில பரப்புகளில் 20 தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை வட்டாரம், சந்தானவேணுகோபாலபுரம் தனியார் கல்லூரியில் வேளாண்மை - உழவர் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் வேளாண் விற்பனை வணிகத் துறை சார்பாக கிராம பஞ்சாயத்தில் இத்திட்டம் துவக்கப்பட்டு 245 விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம் ரூ.9.89 இலட்சம் மானிய விலையில் இடுபொருட்களும், கூட்டுறவுத்துறை மூலம் 5 விவசாயிகளுக்கு ரூ. 3.99 இலட்சத்தில் நெற்பயிர் கடனும் ஆக மொத்தம் 250 விவசாயிகளுக்கு ரூ.13.88 இலட்சம் மானியத்தில் இடுபொருட்களை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பயனாளிகளுக்கு வழங்கினர்.
முன்னதாக, சந்தானவேணுகோபாலபுரம், தனியார் கல்லூரியில் வேளாண்மை - உழவர் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை வணிகத் துறை, கூட்டுறவுத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு உழவர் நலன் சார்ந்த அரங்குகளை பால்வளத்துறை அமைச்சர் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆட்சியர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சந்தானவேணுகோபாலபுரம் பகுதியில் வேளாண் பொறியியல் துறையின் சார்பாக கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.2 இலட்சம் மதிப்பீட்டில் 2 ஆழ்துளை கிணுறுகள் அமைக்கும் பணிகளையும், வரத்துக் கால்வாய் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம், ராமசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 2010-2011-ம் ஆண்டு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ரூ. 2.51 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 100 சமத்துவபுர வீடுகளை ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்து சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிட ஏதுவாக நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஆவின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பாக ரூ.5.6 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆவின் பாலகத்தை பால்வளத்துறை அமைச்சர் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆட்சியர் முன்னிலையில் திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். பின்னர், திருத்தணி வட்டம், டி.கே.கண்டிகை பகுதியில் உள்ள கல்குவாரியை பால்வளத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சந்திரன், முன்னாள் திருத்தணி நகர்மன்ற உறுப்பினர் எம்.பூபதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயற்பொறியாளர் வி.ராஜவேல், தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி, வேளாண் துணை இயக்குநர் (நுண்ணீர்ப் பாசனம்) வெ.தபேந்திரன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சமுத்திரம், காஞ்சிபுரம் - திருவள்ளூர் ஆவின் பொது மேலாளர் ஐ.ஜெய்குமார், துணை பதிவாளர் (பால்வளம்) சித்ரா, பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் பசுபதி, உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.