பதிவு:2024-08-05 13:05:25
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திருவள்ளூரில் சாலை மறியலில் ஈடுபட்ட இடதுசாரிகள் 50 பெண்கள் உட்பட 150 பேர் கைது :
திருவள்ளூர் ஆக 02 : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், மக்கள் மீது விதிக்கப்பட்ட புதிய வரி விதிப்பை கண்டித்தும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரி சலுகை வழங்கி,ஏழை மக்களுக்கு வரி சுமையை கண்டித்தும் திருவள்ளூர் ஸ்டேட் பாங்க் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே. கஜேந்திரன் , மாவட்ட துணை செயலாளர் வி. சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோபால், வட்ட செயலாளர் தமிழரசன், மார்க்சிஸ்ட் லெனின் இயக்க மாவட்ட செயலாளர் அன்பு தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் இடதுசாரிகள் கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 150 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.