கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ. 20 இலட்சம்

பதிவு:2022-05-24 15:13:21



திருவள்ளூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மோரை கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு ரூ. 20 இலட்சத்திற்கான காசோலை : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

 கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த  குடும்பத்திற்கு ரூ. 20 இலட்சம்

திருவள்ளூர் மே 24 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 62 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 56 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 36 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 39 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 76 மனுக்களும் என மொத்தம் 269 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) எஸ்.கோவிந்தராஜன் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், ஆவடி வட்டத்திற்குட்பட்ட மோரை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த திரு.தங்கமணி என்பவர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட ரூ.20 இலட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தாரிடம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

மேலும் திருவள்ளூர் வட்டம், அம்மணம்பாக்கம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவி சரளா என்பவர் பாம்பு கடித்து இறந்ததைத் தொடர்ந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தாரிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பி.ப.மதுசூதணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.