பதிவு:2024-08-06 05:51:13
தான்தோன்றி முத்து மாரியம்மனுக்கு 2.50 லட்சம் செலவில் 1டன் எடை கொண்ட மலர் அலங்காரத்துடன் வீதி உலா
திருவள்ளூர்.ஆக.06: திருவள்ளூர் அருகே கீழ்நல்லாத்தூர் இந்திரா நகர் அமைந்துள்ள தான்தோன்றி முத்துமாரியம்மன் ஆலயத்தில் 9-ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு இந்த ஆலயத்தில் கடந்த 31-ம் தேதி காலை 9 மணிக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி மற்றும் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. 2-ம் நாள் வெள்ளிக்கிழமை காலை கரகம் அழைத்தல், பம்பை உடுக்கையுடன் பதி விளக்கு பூஜை,காப்புக் கட்டுதல் ஆகியவை நடைபெற்றது.
மாலை ஊர் கூடி அம்மனுக்கு பொங்கல் வைத்தனர் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது சனிக்கிழமை காலை 9 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். வீதி உலா வந்த அம்மனுக்கு கிராம மக்கள் தங்கள் வீட்டு வாசலில் படையல் இட்டு வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நாளான ஞாயிற்றுக்கிழமை காலை கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் , மாலை 6 மணிக்கு காப்பு கட்டி விரதம் இருந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.
தொடர்ந்து இரவு தாரை தப்பட்டை மேள வாத்தியம் வாணவேடிக்கை முழங்க அம்மனுக்ககு தொழிலதிபர் நாகராஜன் ஏற்பாட்டில் 2.50 லட்சம் செலவில் 1 டன் எடை கொண்ட பிரம்மாண்ட மலர் அலங்காரத்துடன் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து இரவு தெருக்கூத்தும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், ஆன்மீக நண்பர்கள், அன்னை இந்திரா நகர், அன்னை தங்கம் நகர்,சங்கராச்சாரியார், பல்லவன் திருநகர் ,கீழ் நல்லாத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்