பதிவு:2024-08-06 13:00:46
எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை ரூ. 12301 கோடி செலவில் 133 கிலோமீட்டர் தொலைவிற்கு 6 வழிச்சாலை பணிகள் : அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஏ.வ. வேலு ஆகியோர் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் ஆக 06 : ஸ்ரீ பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் ,சிங்கப்பெருமாள் கோவில் சுற்றியுள்ள பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சென்னை - எண்ணூர் துறைமுகத்திற்கு வரும் கனரக வாகனங்களால் சென்னையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் உரிய நேரத்தில் பள்ளி கல்லூரிக்கு செல்லக்கூடியவர்கள் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் நோயாளிகளை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன.
அதுமட்டுமின்றி சென்னையின் புறநகர் பகுதியில் இருந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்கள் எண்ணிக்கையால் சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எனவே அந்த நெரிசலை குறைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 2022 ஆம் ஆண்டு சென்னை எல்லை சாலைத்திட்டம் என்ற பெயரில் எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை வரையில் ரூ.12,301 கோடி திட்ட மதிப்பீட்டில் 133 கிலோமீட்டர் தொலைவிற்கு ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இப்பணியனது பிரிவு ஒன்றின் படி எண்ணூர் முதல் தச்சூர் வரை 25 கிலோ மீட்டர் தொலைவிலும், பிரிவு இரண்டின் படி தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை 13 கிலோ மீட்டர் வரையிலும், பிரிவு மூன்றின் படி திருவள்ளூர் நெடுஞ்சாலை முதல் வெங்கத்தூர் வரையிலும், பிரிவு நான்கின்படி ஸ்ரீபெரும்புதூர் சிங்க பெருமாள் கோவில் வரை 24 கிலோமீட்டர் வரையும், பிரிவு ஐந்தின் படி சிங்கப்பெருமாள் கோவில் மாமல்லபுரம் பூஞ்சேரி வரை 30 கிலோமீட்டர் என மொத்தம் 133 கிலோமீட்டர் வரை இப்பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இச்சாலை அமையும் வழித்தடங்களில் 349 பாலங்கள் ,5 பெரிய பாலங்கள், 20 சிறிய பாலங்கள், 324 தரைப்பாலங்கள், 49 சுரங்க வழிகள், 4 மேம்பாலங்கள், 3 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. 81 கிராமங்கள் வழியாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந் நிலையில் திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் முதல் புறவழிச் சாலை வரை இரண்டாவது பிரிவாக நடைபெறும் பணிகளை விளையாட்டு மற்றும் சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு இணைந்து சாலைப் பணிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது 133 கிலோமீட்டர் தொலைவில் அமைய உள்ள சாலையின் வரைபடங்கள், சாலை பணிகளுக்கு பயன்படுத்தும் கட்டுமான பொருட்கள் வேலை செய்யும் முறைகளை அமைச்சர்கள் இருவரும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, சாலையில் ராட்சத டிரில்லிங் மெஷின் கொண்டு துளைத்து தரத்தினை சோதனை மேற்கொண்டனர்.
வருகின்ற 2025 ஆண்டுக்குள் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆய்வில் சிறப்பு திட்ட செயலாளர் டேரேஸ் அகமது, நெடுஞ்சாலைத்துறை செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தஸ்நாவிஸ் பெர்னான்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.