பதிவு:2022-05-24 15:17:49
5 பிள்ளைகள் இருந்தும் உதவி செய்யாததால் 79 வயது மூதாட்டி தன் கணவர் மீதுள்ள சொத்தை : தனது பெயருக்கு மாற்றம் செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை
திருவள்ளூர் மே 24 : திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது கணவர் சிவஞானசம்பந்தம். இவர்களுக்கு 3 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 5 பேருக்கும் திருமணம் செய்துவைத்துவிட்ட நிலையில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிக்காக வாங்கிய கடன் பிரச்சினையால் கணவர் சிவஞானசம்பந்தம் அவர்களின் பூர்வீக சொத்தான திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் கிராமத்தில் குளக்கரை தெருவில் உள்ள வீட்டு மனையும் அதில் உள்ள ஓட்டு வீட்டையும் ஆந்திரமாநிலம் நெல்லூரைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவரிடம் அடமானம் வைத்து ஒரு லட்சம்(1,00,000) ரூபாயை கடந்த 15.03.2009-ல் வாங்கியுள்ளார்.
ஆனால் மூதாட்டியின் கணவர் சிவஞானசம்பந்தம் கடந்த 2012-ல் உடல் நலக்குறைவுகாரணமாக உயிரிழந்தார். இதனால் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்து வந்துள்ளார் மூதாட்டி ஜெயலட்சுமி. மகன்கள் மற்றும் மகள்களுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் யாரும் எந்த உதவியும் செய்யாததால் செய்வதறியாது தவித்து வந்த மூதாட்டி அடமானம் வைத்த சொத்தை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் கடன் வாங்கி கடந்த 5.4.2021 அன்று எனது கணவர் அடமானம் வைத்த சொத்தை வட்டியுடன் 2 லட்சம் வரை செலுத்தி பத்திரத்தை மீட்டுள்ளார்.
மீட்ட சொத்து கணவர் பெயரில் இருப்பதாலும், வாங்கிய கடன்2 லட்சத்தை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும், தற்போது விதவை உதவித்தொகை மற்றும் கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் தனது ஜீவனத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருவதாலும் தனது 3 மகன்களோ, 2 மகள்களோ எந்தஉதவியும் செய்யாத நிலையில் வாங்கிய கடனை அடைக்க ஏதுவாகவும் எனது கணவர் மீதுள்ள சொத்தை தனது வாழ்வாதாரத்திற்காகவும் எனது பெயருக்கு மாற்றம் செய்யதாங்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் எனது வாழ்வின் இறுதிநாளில் கடன் இல்லாமல், 3 வேளையும் சாப்பிட்டு உயிர் வாழ நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் வாங்கிய கடனுக்காக தற்போது வாழ்ந்து வரும் இடிந்த வீட்டை சரி செய்யவும் நிலத்தின் ஒரு பகுதியை விற்று அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து எனது இறுதி கட்ட வாழ்வை வாழ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மூதாட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
திருவள்ளூர் வட்டாட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதையடுத்து மூதாட்டி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சென்றார். 5 பிள்ளைகள் இருந்தும், தனது இறுதி நாட்களை வாழ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி கோரிக்கை விடுத்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.